பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன்,  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழல், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு நாளை மறுநாள் (29 ஆம் தேதி) உடன் முடிவடைகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக நேரம் ஒதுக்குமாறு மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கோரிக்கை விடப்பட்டது. மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்ற ஆளுநர், இன்று மாலை 6 மணியளவில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார்.

இந்த நிலையில், கிண்டி ஆளுநர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன், மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் காவிரி மேலாண்மை வாரியம், தமிழக அரசியல் சூழல், பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மு.க.ஸ்டாலின், ஆளுநர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.