Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி.. அரசுப்பள்ளியில் நுழையும் புதிய கல்விக்கொள்கை.. எச்சரிக்கும் அன்புமணி..

புதிய கல்விக்கொள்கையை ஆதரிக்கும் அகஸ்தியா பன்னாடு அறக்கட்டளைக்கு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
 

Government should be consider to permission granted to Agasthya Institution said Anbumani
Author
Tamil Nadu, First Published Jun 22, 2022, 12:51 PM IST

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளைக்கு நடப்பாண்டிலும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; அதன் பணிகளை விரிவுபடுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. கல்விக்கொள்கையில் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நிறுவனத்திற்கு தொடர் சலுகைகள் வழங்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மையம், நடமாடும் அறிவியல் ஆய்வகம், இளம் பயிற்றுனர் தலைவர் திட்டம் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த 5 பயிற்சித் திட்டங்களை நேரடியாக வகுப்புகளுக்கு சென்று நடத்த அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்து பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். கடந்த ஆண்டில் 18 மாவட்டங்களில் மட்டும் இந்த பயிற்சிகளை இணைய வழியில் வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அறிவியல் வளாகம் அமைக்கப்படுவதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு பள்ளிகளில் அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளையின் ஆதிக்கம் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது.

அறிவியல் மையம், அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட பயிற்சிகள் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அத்தகைய பயிற்சிகளை வழங்கும் நிறுவனம் எத்தகைய பின்னணி கொண்டது தான் முக்கியம் ஆகும். மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி வழங்கும் அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளை புகழ்பெற்ற கல்வி நிறுவனம் என்பது உண்மை தான். ஆனால், அந்த நிறுவனத்தின் நிறுவனரான ராம்ஜி ராகவன் புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக ஆதரிப்பவர். மத்திய கல்வி ஆலோசனை வாரியம், அறிவியல் பிரச்சார வாரியம், பிரதமரின் தேசிய அறிவுசார் ஆணைய பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு அமைப்புகளில் உறுப்பினராக பணியாற்றியவர்.

மேலும் படிக்க: OPS vs EPS: தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் நடைபெறுவதை அராஜகம் என்று கூறுவதா? ஓபிஎஸ்ஐ சீண்டிய வளர்மதி

புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பதையும் கடந்து, "புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள பல அம்சங்கள் அகஸ்தியா அறக்கட்டளையின் செயல்பாடுகளை எதிரொலிக்கின்றன என்று வல்லுனர்கள் பாராட்டுகின்றனர்" என பல்வேறு தளங்களில் பெருமிதப்பட்டு வருபவர். இப்படிப்பட்டவர் நடத்தும் தொண்டு நிறுவனம் புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை மாணவர்கள் மீது திணிக்கக்கூடும் என்ற ஐயம் இயல்பானதே. தமிழக மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் பணியை அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளை, கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியிலேயே தொடங்கி விட்டது. அப்போதே இந்த நிறுவனம் பயிற்சியளிக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்தது. இவ்வளவுக்கும் அப்போது புதிய கல்விக் கொள்கை பெரிய அளவில் சர்ச்சையாகவில்லை; அகஸ்தியா அறக்கட்டளை புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கவில்லை.

ஆனால், இப்போது தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்ப்பதுடன், தமிழகத்திற்கான தனி கல்விக் கொள்கையை வகுப்பதற்கு குழுவை அமைத்துள்ளது. இத்தகைய சூழலில், புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் நிறுவனத்தைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் முடிவை கடந்த ஆண்டு எடுத்ததுடன், நடப்பாண்டில் அந்த நிறுவனத்தின் சேவைகளையும் விரிவுபடுத்த திமுக அரசு அனுமதித் திருக்கிறது. அகஸ்தியா அறக்கட்டளை வழங்கும் அறிவியல் சார்ந்த பயிற்சிகள் உலகில் வேறு எங்கும் கிடைக்காதவை அல்ல. அத்தகைய பயிற்சிகளை தமிழக அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கொண்டு வழங்க முடியும். எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சிகளை வழங்க அகஸ்தியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். தமிழக அரசின் கல்வித்துறை வல்லுனர்களைக் கொண்டு இத்தகைய பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்."என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க:மகாராஷ்டிரா சட்டசபை கலைக்கப்படுகிறது; உத்தவ் தாக்கரே ராஜினாமா?

Follow Us:
Download App:
  • android
  • ios