இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நோய்த்தொற்றாலும் மரணங்களின் எண்ணிக்கையாலும் மக்கள் கதிகலங்கி நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. தடுப்பூசி தேவையை உரிய முறையில் கணக்கில் கொள்ளாத மத்திய அரசு தற்போது இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே தடுப்பூசி தயாரிப்புக்கான அனுமதியை வழங்கிவிட்டு, தடுப்பூசி தயாரிப்பில் மிக நீண்ட அனுபவமும், பெருமளவிற்கான தயாரிப்புத் திறன் கொண்டதுமான பொதுத்துறை நிறுவனங்களை முற்றாக நிராகரித்துள்ளது.
இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பின் மூலமாகத்தான் உலகிலேயே பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசிகள் தயாரிப்பில் இந்தியா முதலிடம் வகித்து வந்தது. குறிப்பாக, மத்திய பொதுத்துறை நிறுவனங்களான செங்கல்பட்டில் இயங்கிவரும் ஹிந்துஸ்தான் பயோடெக், நீலகிரியில் செயல்படும் பாஸ்டியர் ஆய்வகம், சென்னையில் உள்ள பி.சி.ஜி. ஆய்வகம், சிம்லாவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தியை மேற்கொண்டிருந்தால் நாட்டின் ஒட்டுமொத்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
மத்திய அரசு இந்த நிறுவனங்களை உற்பத்தியில் ஈடுபடுத்தியிருந்தால் இன்று ஏற்பட்டிருக்கும் தடுப்பூசி பற்றாக்குறைக்கும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கும் மக்கள் ஆளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால், மத்திய அரசு, சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி செய்து அவர்கள் மூலம் தடுப்பூசியை உற்பத்தி செய்யப் பணித்திருப்பதும் தற்போது அதிக விலை கொடுத்து தடுப்பூசியை மாநில அரசுகள் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருப்பதும் நாட்டு மக்களின் உயிரோடு விளையாடும் காரியமாகும்.
தற்போதைய நிலைமையையும், தேவையையும் கவனத்தில் கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் அனுமதியை உடனடியாக வழங்குவதோடு, தயாரிப்பைத் தொடங்குவதற்கான நிதி உதவியினையும் மத்திய அரசே வழங்க வேண்டும். எனவே கட்டாய உரிமம் (Compulsory Licencing) எனும் முறையை அமலாக்குவதன் மூலம் அரசு பொதுத்துறை நிறுவனங்களிலும் தேவையான தடுப்பூசிகளை விரைந்து தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். சந்தையில் தடுப்பூசி விற்பனை எனும் கொள்கையைத் திரும்பப் பெர வேண்டும், அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய தடுப்பூசி கொள்கையின் மூலம் இனிமேல் தடுப்பூசி, மருந்துக் கடைகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட பரவலான இடங்களில் கிடைக்கும், அதை வாங்கி மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனைத்து மக்களுக்கும் முற்றிலும் இலவசமாகத் தடுப்பூசி அளிக்க வேண்டிய மத்திய அரசு, தனது கடமையிலிருந்து விலகி நிற்பதோடு சந்தையை நோக்கி மக்களைத் தள்ளிவிடுகிற ஆபத்தான முடிவையும் எடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது மக்களின் அச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் மருத்துவமனைகளிலும், கள்ளச் சந்தைகளிலும் பகிரங்கமாக நடைபெற்ற கட்டணக் கொள்ளையைப் போலவே, இம்முறையும் சந்தைகளில் தடுப்பூசியின் விலை பலமடங்கு உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பையே அரசின் முடிவு உருவாக்கும் என்பதால் சந்தையில் தடுப்பூசி விற்பனை எனும் அரசின் கொள்கையைத் திரும்பப் பெற்று அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி எனும் முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.