Asianet News TamilAsianet News Tamil

இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்யாத தமிழக அரசு... புலியாய் பாயும் ராமதாஸ்..!

இட ஒதுக்கீடு வழங்குவதில் தவறு நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கிய பிறகும், இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்யாமல், கடந்த காலங்களில் செய்ததையே நாங்களும் செய்கிறோம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது சிறிதும் பொறுப்பற்ற செயலாகும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

Government of Tamil Nadu does not correct the treachery...ramadoss
Author
Tamil Nadu, First Published Jan 5, 2020, 5:00 PM IST

இட ஒதுக்கீடு வழங்குவதில் தவறு நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கிய பிறகும், இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்யாமல், கடந்த காலங்களில் செய்ததையே நாங்களும் செய்கிறோம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது சிறிதும் பொறுப்பற்ற செயலாகும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதில் மீண்டும் ஒருமுறை இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளன. பலமுறை சுட்டிக்காட்டியும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் சமூக நீதிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் துரோகம் செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.

Government of Tamil Nadu does not correct the treachery...ramadoss

அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 17 பாடங்களுக்கான 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. அவற்றில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 12 பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மீதமுள்ள பாடங்களில் தமிழ், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் பட்டியல் கடந்த 2-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. முதலில் செய்யப்பட்ட நியமனங்களில் இடஒதுக்கீட்டு விதிகள் எவ்வாறு அப்பட்டமாக மீறப்பட்டனவோ, அதேபோல், இப்போதும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

உதாரணமாக தமிழ் பாடத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் 54, பொதுப்பிரிவில் ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பின்னடைவுப் பணியிடங்கள் 3 என மொத்தம் 57 பின்னடைவுப் பணியிடங்கள், 245 நடப்புக் காலியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 4 பணியிடங்கள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ஓர் காலியிடம் என மொத்தம் 319 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பின்னடைவுப் பணியிடங்களில் அச்சமுதாயத்தினரை நியமித்து விட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும் தான் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் உண்மையான சமூகநீதியை நிலைநிறுத்த முடியும்.

Government of Tamil Nadu does not correct the treachery...ramadoss

ஆனால், பின்னடைவுப் பணியிடங்கள், நடப்புக் காலியிடங்கள் என அனைத்துக்கும் ஒன்றாக சேர்த்து ஒரே தரவரிசைப் பட்டியல் தயாரித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், அதில் மட்டும் ஒட்டுமொத்தமாக 20% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் இடஒதுக்கீட்டுப் பிரிவினராக தேர்வு வாரியம் கணக்குக் காட்டியுள்ளது. தமிழ் பாடத்திற்கான நடப்புக் காலியிடங்கள் 245 என்பதால், அதில் 31%, அதாவது 76 இடங்கள் பொதுப்பிரிவினருக்கானதாகும். அவற்றில் 28 இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கைப்பற்றியுள்ளனர். அந்த 28 இடங்களையும் பொதுப்பிரிவு இடங்களாக கருதி, அவர்கள் தவிர்த்து மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை.

இட ஒதுக்கீட்டு விதி முறையாக பின்பற்றப்பட்டிருந்தால், பின்னடைவுப் பணியிடங்களில் 54 பேர், பொதுப்பிரிவில் 28 பேர், இட ஒதுக்கீட்டில் 49 பேர் என மொத்தம் 131 மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஆசிரியர் பணி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 28 பேர் குறைவாக 103 பேருக்கு மட்டும் தான் வேலை கிடைத்துள்ளது. அதேபோல், பொருளாதார ஆசிரியர்கள் நியமனத்தில் 12 பணியிடங்கள், வரலாற்று ஆசிரியர்கள் நியமனத்தில் 6 பணியிடங்கள் என்று மொத்தம் 46 மிகவும் பிற்பட்டோருக்கு சமூக நீதி மறுக்கப்பட்ட்டிருக்கிறது.

Government of Tamil Nadu does not correct the treachery...ramadoss

மேலும், பட்டியலினத்தவர்கள் 6 பேருக்கும், அருந்ததியர் 2 பேருக்கும் இதேபோல் சமூக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதற்கு முன் வேதியியல் உள்ளிட்ட 7 பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமனத்தில் இதேபோன்று துரோகம் இழைக்கப்பட்ட போது, அதை பா.ம.க. கடுமையாகக் கண்டித்தது. அதுமட்டுமின்றி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரை பா.ம.க. குழுவினர் சந்தித்து இதுபற்றி முறையிட்ட போது, கடந்த கால நடைமுறைகளின்படியே இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டிருப்பதாகவும், அந்த நடைமுறையை மாற்ற முடியாது என்றும் கூறினார். இட ஒதுக்கீடு வழங்குவதில் தவறு நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கிய பிறகும், இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்யாமல், கடந்த காலங்களில் செய்ததையே நாங்களும் செய்கிறோம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது சிறிதும் பொறுப்பற்ற செயலாகும்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட இடங்கள் அவர்களைக் கொண்டு நிரப்பப்படாததால் தான் அவை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவிக்கப்படுகின்றன. அது அவர்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல... மாறாக மிகவும் காலம் கடந்து வழங்கப்படும் நீதி ஆகும். ஆனால், அதை மதிக்காமல் பின்னடைவு பணியிடங்களால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய நீதியை தடுத்து நிறுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முயல்வது பெரும் பாவமாகும்.

Government of Tamil Nadu does not correct the treachery...ramadoss

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை புரிந்து கொள்ளவும், சமூக நீதியை காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இல்லை. எனவே, இந்த விஷயத்தில் முதலமைச்சரும், பள்ளிக்கல்வி அமைச்சரும் தலையிட்டு ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக நீதியை நிலை நிறுத்த முன்வர வேண்டும்.’’ என ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios