கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகநாதன். இவரது மகள் ராஜேஸ்வரி(31). கோவையில் இருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் கேஷியராக பணியாற்றி வருகிறார். கடந்த 11 ம் தேதி காலையில் தனது இருசக்கர வாகனத்தில் ராஜேஸ்வரி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கோவை பீளமேடு பகுதியில் அதிமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தன.

ராஜேஸ்வரி அந்த வழியாக சென்ற போது ஒரு கொடிக்கம்பம் சரிந்து விழுந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, தன் மேல் கொடிக்கம்பம் விழாமல் இருப்பதற்காக பிரேக் போட்டுள்ளார். திடீரென வாகனத்தை நிறுத்தியதால் நிலை தடுமாறி ராஜேஸ்வரி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று ராஜேஸ்வரியின் இரண்டு கால்களிலும் ஏறியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இந்த நிலையில் ராஜேஸ்வரியின் இடது காலில் தசைகள் சிதைந்து, எலும்புகள் முறிந்திருந்ததால் அவரது காலை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி ஆபத்தான கட்டத்தில் இருந்த ராஜேஸ்வரியின் தொடைக்கு கீழே இடது கால் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ராஜேஸ்வரிக்கு செயற்கை கால் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிகிச்சையில் இருக்கும் ராஜேஸ்வரியை நேற்று திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ஏழ்மை நிலையில் இருக்கும் ராஜேஸ்வரிக்கு செயற்கை கால் பொருத்த திமுக உதவி செய்யும் என்று கூறிய ஸ்டாலின் அவருக்கு 5 லட்சம் மருத்துவ செலவுகளுக்காக வழங்கினார். அதிமுக சார்பாக ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என்ற அவர், ஆட்சியாளர்களுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் இருக்கக்கூடாது என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து காலை இழந்து சிகிச்சையில் இருக்கும் ராஜேஸ்வரிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.