’சசிகலா மற்றும் தினகரனின் ஸ்லீப்பர் செல்! ஆக இருக்கக்கூடும் என்பதால் அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் இரு முதல்வர்களான இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் பெரிதாய் நெருக்கம் காட்டுவதில்லை’ என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு விமர்சனம் உண்டு.
 
தமிழக அமைச்சரவையின் பல அமைச்சர்களும் வெளிநாடுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகையில், ஓ.எஸ்.மணியன் தன்னையும் அப்படி செல்ல அனுமதிக்க வேண்டி முதல்வருக்கு மிகவும் தாழ்மையான கடிதம் வைத்தார்! என்றெல்லாம் கூட அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. 

சூழல் இப்படியிருக்கும் நிலையில், முதல்வர்களின் கோபத்தை அதிகப்படுத்தும் விதமாக அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் நிகழ்ச்சி ஒன்று அமைந்திருப்பதுதான் ஹாட்டே.

நாகப்பட்டிணத்தில் அமைச்சர் மணியன் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் பங்கேற்ற விழா நடந்தது. இதில் பூம்புகார் மற்றும் சீர்காழி தொகுதிகளின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புலம்பலாகவும், ஆதங்கமாகவும், ஆவேசமாகவும் பேசினர். இதனால் ‘ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களே ஆட்சியின் பிரச்னையை ஓப்பனா பேசுறாங்க. இதை தடுக்காம அமைச்சர் மணியன் அமர்ந்திருக்கிறார். அப்படின்னா இந்த ஆட்சியும், முதல்வர்களும் அசிங்கப்படணும்னு அவர் நினைக்கிறாரா?’ என்று பெரும் பொங்கலும், பொசுங்கலும் எழுந்துள்ளது. 

அப்படி என்ன ஆதங்கமாக பேசிவிட்டார்கள் இருவரும்.......?
சீர்காழி தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாரதி “மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து ரெண்டு வருடங்களாக நான் வெச்சிட்டு இருக்கிற கோரிக்கைகளை கூட்டுறவு துறை அதிகாரிகள் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க. என் தொகுதிக்குட்பட்ட அனக்குடியில் ஆயிரத்து ஐநூற்று அறுபது குடும்ப அட்டைகள் இருக்குது. நியாய விலை கடையை பிரிச்சு கொடுங்கன்னு ரெண்டு வருஷமா கேட்டுட்டு இருக்கேன். ஆனால் மாவட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்.” என்று மைக்கில் பேசி, மிரள வைத்திருக்கிறார். 

இவர் கொடுத்த ஷாக் தீரும் முன் எழுந்த அதே மாவட்டம், பூம்புகார் தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான பவுன்ராஜ் “நானும் மக்கள் நலனுக்காக ரேஷன் கடை தொடர்பாக கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால் செய்ய மனமில்லை அவர்களுக்கு. ‘பிரிக்க முடியாது என்று சட்டப்படி எழுதிக் கொடுங்கள்.’ என்று வலியுறுத்தியும் பார்த்துவிட்டேன். 

அரசு அதிகாரிகளால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறோம். இவர்களின் செயலால், எங்களால் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியலை. இதனால் மக்கள் எங்கள் மீது கோவத்தில் உள்ளனர்.” என்று போட்டுடைத்தார். 

அமைச்சரின் மேடையில் எம்.எல்.ஏ.க்கள் கொந்தளித்த விவகாரம், இ.பி.எஸ்.ஸை ரொம்பவே சூடாக்கியிருக்கிறது. 

இந்த நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களே இந்த ஆட்சியின் லட்சணத்தை வெளிப்படையாக கிழித்துவிட்டனர்! என்று தி.மு.க. இதை பெரும் அரசியலாக்கி வருகிறது.