கடலூர்  மற்றும் ஈரோடு அரசு  மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை ,இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்திட வேண்டும் எனவும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணர்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்க வேண்டும். எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள்  சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து  இன்று செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திர நாத் கூறியதாவது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து 2013 ஆம் ஆண்டு முதல் அரசே ஏற்று நடத்தி வருகிறது. அப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தது தான் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும். இந்திய மருத்துவக்கழக ஆவணங்களில் அது அரசு மருத்துவக் கல்லூரி என்றே குறிப்பிடப் படுகிறது.

தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் அதற்கு மாணவர் சேர்க்கையும் 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு  14.02.2020 அன்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பொழுது,  இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ,கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும் என துணை முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்தார்.அது கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி   என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. ஆனால் அக்கல்லூரியின் கல்விக் கட்டணம் ஏற்கனவே இருந்த அளவிற்கே ரூ 5.44 லட்சம் என நிர்ணயித்து வசூல் செய்யப்படுகிறது.இது அரசே நடத்தும் கட்டண கொள்ளையாக உள்ளது.சென்ற ஆண்டு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் ,சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கின் மூலம், சென்ற ஆண்டு பிற தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலாக வசூல் செய்யப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது.

 

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு கல்வி கட்டணமாக ,கடந்த 12.10 2020 அன்று ரூ 4 லட்சம் என அறிவிப்புப் பலகையில் நிர்வாகம் வெளியிட்டது. அதை ரூ 5.44 லட்சமாக அதிகரித்து மீண்டும் 12.11.2020 அன்று கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாளாக 30.11.2020 யை நிர்ணயித்துள்ளது. இது கடும் கண்டனத்திற் குரியது.இந்ந கட்டணத்தை செலுத்த இயலாமல் பெற்றோர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல், ஈரோடு மாவட்டம், IRT பெருந்துறை மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்தி வருகிறது. தற்பொழுது அது, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக  செயல்படுகிறது. அக் கல்லூரிக்கான கட்டணமாக ரூ 3.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக் கட்டணத்தை செலுத்த முடியாமல் பெற்றோர்கள் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும் அரசே ஏற்ற பிறகு, அவை அரசு மருத்துவக் கல்லூரிகளாக செயல்படும் போது, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டணங்களைத் தான் அரசு வசூல் செய்ய வேண்டும்.

ஆனால் , அதை விடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலாக கட்டணங்களை வசூல் செய்வது எந்த வகையிலும் நியாயமல்ல. சரியல்ல. தமிழக அரசே, வசதி படைத்தோருக்காக,மக்கள் வரிப் பணத்தில் தனியாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளை நடத்துவது போல் இது உள்ளது. இது சமூக நீதிக்கும்,ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரானது.எனவே, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணமான ரூ 13,670 யை ,இந்த இரு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும். கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (பழைய பெயர் இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி) , அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமான ரூ 11,610 யை மட்டுமே கட்டணமாக  நிர்ணயிக்க வேண்டும். கட்டணத்தை கட்டாவிட்டால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் போக்கை இக் கல்லூரிகளின்  நிர்வாகங்கள் உடனடியாக கைவிட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதும், அந்த ஒதுக்கீட்டு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றிருப்பதும் மனமாற வரவேற்புக்குரியது. 

ஆனால்,அதே சமயம் ,ஏழை எளிய ,நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கக்கூடிய கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி,கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரி, மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலாக கட்டணங்களை வசூலிப்பது  சரியல்ல. இந்த பாரபட்சப் போக்கை அரசு கைவிட வேண்டும். கொரோனா  பெருந்தொற்றை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் உருவான பொருளாதார பாதிப்பால் பெற்றோர்கள் மிகப்பெரும் இழப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.இதை அரசு  கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க் கால அடிப்படையில் செயல்பட்டு , இந்த கட்டணங்களை இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்திட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளின், தொழிற் கல்லூரிகளின் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளது. அவற்றை குறைக்க வேண்டும்.இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29.11.2020 ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு சென்னையில் ,கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.