ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார்.

அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி சட்டப்பேரவையில் உரையை தொடங்கினார் கவர்னர்  பன்வாரிலால் புரோகித். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினார்.

இதையடுத்த கவர்னர்  உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.  வெளிநடப்புக்கு பின்னர் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழக அரசு எல்லா நிலையிலும் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. கஜா புயல் நிவாரண பணிக்கு மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை பெற முடியவில்லை.

ஸ்டெர்லைட், மேகதாது உள்ளிட்ட பிரச்சனையிலும்  தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் . விவசாயிகளை அழைத்து பேச தமிழக அரசு தவறி விட்டது. விசாரணைக்கு உள்ளான விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவில்லை.

ஜெ. மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார் . ஜெயலலிதா மரணம் தொடர்பாக  சி.பி.ஐ. விசாரணை வேண்டும். தோல்வி அடைந்த அரசு எழுதி தந்தவற்றை ஆளுநர் வாசிக்கிறார் என ஸ்டாலின் குற்றம்சாடடினார்.