மீண்டும் தமிழகத்தை கொள்ளையடிக்க பசுத்தோல் போர்த்திய  நரியாக திமுக வலம்வந்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:  திமுக என்ற தீய சக்தி புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்டது. இந்தத் தீய சக்தியை தமிழகத்தில் தலைதூக்க விடமாட்டோம் என்று நாங்கள் இருக்கிறோம்.  வீடு வீடாக சென்று புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திட்டங்களை தற்போது முதலமைச்சர் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி தமிழ்நாடு எப்போதும் அதிமுகவின் கோட்டை என்பதை மகளிர் அணியினர் நிரூபிக்க வேண்டும். 

தமிழகத்தில் அதிமுக 100 ஆண்டு காலம் நிலைத்து நிற்கும் என்ற அம்மாவின் கூற்றுப்படி சனிப்பெயர்ச்சி நமக்கு நன்றாக அமைந்துள்ளது. ஆனால் திமுகவுக்கு சனி பிடித்துள்ளது. எந்த ஆட்சியிலும் மாணவர்களுக்கு 16 வகையான பொருட்களை அளித்தது கிடையாது., அதிமுகதான் இதை செய்துள்ளது. சோழர் காலத்தில் எப்படி குடிமராமத்து பணிகள் செய்து குடி காக்கப்பட்டதோ அதுபோல மக்களை காக்கிறது அதிமுக அரசு. இதனால்தான் மத்திய அரசு நீர் மேலாண்மைக்கு விருதுகளை அளித்துள்ளது. மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக இருந்த நிலையில் அந்த கனவை நனவாக்கும் நிலையில் அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது அம்மாவின் அரசு.

தாலிக்கு தங்கம் திட்டத்தில் டன் கணக்கில் தங்கத்தை வழங்கியுள்ளோம், இந்த திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லை, இப்போது திமுகவின் தலைவர் ஸ்டாலின் அல்ல பிரசாந்த் கிஷோர் திமுகவின் தலைவர் பிரசாந்த் கிஷோரையே திமுக நம்பியுள்ளது. ஏறக்குறைய 500 கோடிக்கு மேல் செலவழித்து சமூகவலைதளங்களில் பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஆனால் அந்த பொய் பிரச்சாரம் ஒருபோதும் எடுபடாது. மீண்டும் எப்படியாவது தமிழகத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பசுத்தோல் போர்த்திய நரியாக திமுக வலம் வருகிறது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.