வீடு, கார் வாங்க பெறப்படும் கடன்களுக்கு அக்டோபர் 1 முதல் வட்டி விகிதம் குறைக்க ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இத்திட்டதால் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயனடைவார்கள் என்றும் அந்த வங்கி கூறியுள்ளது.

 

சென்னை போன்ற பெரு நகரங்களில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது சாதாரன நடுத்தர குடும்பங்களுக்கு பெருங் கனவாகவே இருக்கிறது, அதற்கு காரணம் கையில் கவுரமாக வேலை இருந்தாலும் முதல் வைக்க பணம் இல்லை, அப்பணத்தை வங்கிகள் கொடுக்க முன்வந்தாலும், வாங்கிய கடனுக்கு காலம் முழுக்க வட்டி கட்டி மீளமுடியாத நிலை. இது தான் இன்றைய எதார்த்தம். இது போன்ற நிலையில் வீடு, வாகனம், சிறுதொழில்களின் கடன்களுக்கான வட்டி விகிதம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் குறையும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

 

ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கையில் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததோடு, அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ரெப்போ விகிதத்துடன் கடன்களுக்கான வட்டி விகிதம் இணைக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வீடு, வாகனம், சில்லறைக் கடன்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்கள் ஆகியவற்றை ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு வட்டி குறைப்பு செய்யப்படும் என்பது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.  அக்டோபர் முதல் வாரத்திற்கு பின்னர் விவரம் தெரியவரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.