நடிகர் சூர்யா நடித்த காப்பான் படத்தில்.. விவசாய பயிர்களை அழிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து ஓர் ஆய்வகத்தில் ஆண் வெட்டுக்கிளிகள் உருவாக்கப்பட்டு அந்த பூச்சிகளை ஹெலிக்காப்டர் மூலம் கொண்டு வந்து வேளாண் மண்டலப்பகுதிகளில் திறந்து விடுவார்கள். விவசாயப்பயிர்கள் மரங்கள், செடி, கொடிகள் எல்லாம் எங்கு பார்த்தாலும் வெட்டுக்கிளிகள் அவைகளை நாசம் செய்து கொண்டிருக்கும்.

அதன்பிறகு,வேளாண்மைத்துறை விஞ்ஞானிகள் அந்த கிராமத்தில் முகாமிட்டு ஆய்வு செய்வார்கள். அப்போது ஒரு விஞ்ஞானி சொல்லுவார் நல்லவேளை தப்பித்தோம் இங்கு வந்திருக்கும்  வெட்டுக்கிளிகள் எல்லாம் ஆண் இனத்தை சேர்ந்தது. ஆண், பெண் இனம் சேர்ந்து வந்திருந்தால் யாராலும் அழிக்க முடியாது. ஆண் வெட்டுக்கிளிகளை கொஞ்சம் கொஞ்சமாக அளித்துவிடலாம் என்பார். அதன் பிறகு சூர்யா.... வேளாண்மையை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட வெட்டுக்கிளி எந்த நாட்டின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது  என்பதை கண்டுபிடிப்பார்.  அந்த படம் போல் வெட்டுக்கிளி படையெடுப்பு இந்தியாவிலும் தமிழகத்திலும் நாசம் செய்து கொண்டிருக்கிறது.

நம் நாட்டிற்கு திடீரென வெட்டுக்கிளி படையெடுத்து விவசாயத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. இந்த வெட்டுக்கிளியை எப்படி விரட்ட வேண்டும் என்று வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதற்கான விளக்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
"வெட்டுக்கிளி ஊடுருவல் அதிகம் இருந்தால், உடனடியாக எதிர்கொள்வதற்கான பரிந்துரைக்கப்பட்ட உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டும். அவற்றின் தாக்கம் ஏற்பட்டால் விவசாயிகள் டிரம், தகரடின்கள் மூலம் ஒலி எழுப்பி அவை பயிர்கள் மீது அமர்வதை தடுக்கலாம். முதல் சுற்றில் "அசாடிராக்டின்" என்ற வேம்பு சார்ந்த தாவர பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வேண்டும்.

பெருங்கூட்டமாக வந்துவிட்டால் ஏக்கர் ஒன்றுக்கு "மாலத்தியான்" 50 சதவீதம் 1.850 லிட்டர் அல்லது மாலத்தியான் 25 சதவீதம் நனையும் தூள் 3.7 கிலோ, குளோர்பைரிபாஸ் 20 சதவீதம் 1.2 லிட்டர் அல்லது லாம்டாசைஹேளோத்ரின் 5 சதவீதம் 400 மி.லி. போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும். லாம்டாசைஹேளோத்ரினை ஒருவர் 2 மணி நேரத்துக்கு மேல் தெளிக்கக்கூடாது.

பரந்த அளவில் வந்தால் "மாலத்தியான்" 96 சதவீதம் பூச்சிமருந்தை தீயணைப்பு எந்திரம் மூலம் தெளிக்கலாம். சாதாரண உள்ளூர் வெட்டுக்கிளிகள் உயிர் சங்கிலியின் ஒரு பகுதி. அதில் 250 வகைகள் உள்ளன. நன்மை செய்யும் வெட்டுக்கிளிகளும் உள்ளன. நீள்கொம்பு வெட்டுக்கிளிகள், தீமை செய்யும் பூச்சிகளை கொல்லும் என்பதால் அவை பாதுகாக்கப்பட வேண்டும். உள்ளூர் வெட்டுக்கிளிகளைக் கண்டு அச்சம்கொள்ள வேண்டாம். கூட்டமாக தென்பட்டால் வேளாண், தோட்டக்கலை துறைக்கு தகவல் தெரிவியுங்கள் என்கிறார்கள் வேளாண் விஞ்ஞானிகள்.