சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரு முதலாளிகளுக்கு மட்டும் கடை நடத்த அனுமதியா? என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவுகிறது என்கிற காரணத்தைக் கூறி, கோயம்பேடு காய்கறி  சந்தையை தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனாவின் உற்பத்தி மையமாக சித்தரித்து, திருமழிசைக்கு மாற்றியதோடு, அங்கேயும் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி மார்க்கெட் மேனேஜ்மென்ட் கமிட்டியானது சுமார் 200 பெருமுதலாளிகளுக்கு மட்டும் இடமளித்துவிட்டு சுமார் 2000 மேற்பட்ட சிறு வணிகர்களையும், அவர்களையும் அவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்திருந்த சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது. 

தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட ஊரடங்கு முழுமையாக விளங்கிக் கொள்ளப்படாத அதேநேரம், கொரோனாவில் இருந்து தமிழகம் மீண்டு வந்து கொண்டிருப்பதாக கூறி திருமழிசையில் இருந்து காய்கறி சந்தையை கோயம்பேடிற்கு மாற்றியுள்ள தமிழக அரசும், சிஎம்டிஏ நிர்வாகமும் மீண்டும்  இங்கேயும் அதே 200 பெருமுதலாளிகளுக்கு மட்டும் வாய்ப்பளித்திருப்பது மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதோ என்கிற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிறு வணிகர்களையும் தொழிலாளர்களையும் கவனத்தில் கொள்ளாமல் பெருமுதலாளிகளுக்கு மற்றும் சாதகமாக நடந்து கொண்டிருக்கும் சி.எம்.டி.ஏ மற்றும் எம்.எம்.சி நிர்வாகத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர்கள் அணி கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. 

மேலும் கடந்த ஏழு மாதங்களாக ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூடல் இடமாற்றம் போன்ற காரணங்களால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வணிகர்களும் தொடர்ச்சியாக தொழில் நடத்த முடியாமல் அல்லல்பட அவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்திருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கவனிக்கத் தவறிய எடப்பாடி பழனிச்சாமி அரசு சாமானிய மக்களுக்கான அரசு அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளது.

எனவே கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் 200 பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே அனுமதி என்கிற நிலையை மாற்றி மீதமுள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு வணிகர்கள் உடனடியாக தங்களின்  கடைகளைத் திறந்து வணிகம் செய்ய அனுமதித்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டுமென மக்கள் நீதி மையம் கட்சியின் தொழிலாளர்களை சார்பில் வலியுறுத்துகிறோம் எனது என கூறப்பட்டுள்ளது.