தர்மயுத்தம் டூ என எந்த சீன் போட்டாலும் ஒரு பயனும் இல்லை..! ஓபிஎஸ்-ஐ சீண்டிய கோகுல இந்திரா
ஓ.பன்னீர் செல்வம் மூலம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டும் என்ற தனது சில்லறை தனமான ஆசையை திமுக நிறைவேற்றியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குற்றம்சாட்டியுள்ளார்.
ஓபிஎஸ் அகோரமான முகம் வெளிப்பட்டுள்ளது
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களோடு கைப்பற்றினார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த சீலை அகற்ற கோரி ஓபிஎஸ்-இபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தநிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்த அத்துமீறல் சொல்லவே முடியாத ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று என தெரிவித்தார். இச்செயலை விவரமே தெரியாத ஒருவரிடம் கேட்டால் கூட ஒரு அராஜகமான செயல்பாடு என்பது எல்லோருக்கும் தெரியும் என கூறினார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அடிக்கடி ஒன்று சொல்லுவார், ஓபிஎஸ் அவர்களுக்கு இன்னொரு முகம் இருக்கின்றது, ஒன்றுமே தெரியாது போன்று பேசுவார் மற்றவர் வாழப் பொறுக்க மாட்டார். தற்போது ஓபிஎஸ்யின் அகோரமான முகம் வெளிப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
திமுகவின் ஆசை நிறைவேறியது
அதிமுக அலுவலகம் கோவிலாக நினைக்கக்கூடிய இடத்தை கடப்பாறை கொண்டு போய் பூட்டை உடைத்து இருப்பதாக தெரிவித்தார். எம்ஜிஆரின் சொத்தான கட்சி தலைமை அலுவலகத்தில் புகுந்து ஆவணங்கள், பொருள்களை சேதப்படுத்தி சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் ஓபிஎஸ் அவர்கள் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு பேரணியாக வரும் வரை அதிமுக அலுவலகத்தின் அடுத்த தெருவில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தில் இருந்து ஒரு காவலர் கூட அதிமுக தலைமையகத்திற்கு பாதுகாப்பு அளிக்க முன்வரவில்லை எனவும் குற்றம் சாட்டினார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு அதன் மூலம் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டும் என்பதே திமுகவின் சில்லறைத்தனமான ஆசை எனவும் விமர்சித்தார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஜாதி வாரியாக ஆட்களை திரட்டிய ஓபிஎஸ் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கூட இருப்பவர்களே முதுகில் குத்த போறாங்க..! எடப்பாடி பழனிசாமியை அலர்ட் செய்யும் திமுக எம்.பி
ஓபிஎஸ் மண் குதிரை
அதிமுக தொண்டர்கள் மனதில் ஒரு சிறிய அளவிலான மரியாதை பெற்றிருந்த ஓபிஎஸ், இந்த சம்பவம் மூலம் அவரது மரியாதையை அவரே கெடுத்துக் கொண்டார் என தெரிவித்தார். மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இருக்கும்போது எங்கே இருக்கிறார் என்று, இருக்கும் இடம் தெரியாமல் இருந்த கே சி பழனிச்சாமி அவர் மறைவுக்கு பின்னர் கட்சி குறித்து பல்வேறு குழப்பமான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் தன்னுடன் பேசும்போது கூட ஓபிஎஸ் என்ற மண் குதிரையை நம்பி தான் ஏமாந்து விட்டதாகவும் தெரிவித்ததாகவும் கோகுல இந்திரா கூறினார். மேலும் ஓபிஎஸ் இந்த முறை தர்மயுத்தம் டூ என சீன் போட முடியாது என்ற காரணங்களால் அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி சமூகவிரோதிகள் துணையுடன் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படியுங்கள்