கர்நாடகத்தில் உள்ள பஞ்சமஷாலி மடத்தின் மடாதிபதி வசனாநந்தா சுவாமி பொதுமேடையில் வைத்து முதல்வர் எடியூரப்பாவை மிரட்டும் வகையில் பேசியதால், அவர் ஆத்திரமடைந்து வெளியேறினார்.

கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் பஞ்சமாஷாலி சமுதாயத்தினரின் மாநாடு நடந்தது. இதில் பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வசனாநந்தா சுவாமி , முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வசனாநந்தா சுவாமி, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும், குறைந்தபட்சம் 3 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும், தொடர்ந்து மூன்றரை ஆண்டுகள் உங்கள் ஆட்சி நீடிக்க இதை செய்யவேண்டும். இல்லாவிட்டால், ஒட்டுமொத்த பஞ்சமாஷாலி சமுதாயமும் உங்களை புறக்கணித்து விடும் என முதலமைச்சர் எடியூரப்பாவை பார்த்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

அதன்பின் முதல்வர் எடியூரப்பா பேசுகையில், “ மடாதிபதி கூறியதை எல்லாம் செய்ய முடியாது அவர் அதனது கோரிக்கையை என்னிடம் தெரிவிக்கலாம். என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசலாம் அதற்காக தம்மை மிரட்ட முடியாது. 

நீங்கள் நினைப்பது போன்று பதவிக்காக எதையும் செய்யும் தலைவர் நான் அல்ல. நான் தேவையில்லை என்று முடிவுசெய்துவிட்டால், எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவேன் ” என்றும் கூறினார். 

cமடாதிபதியின் பேச்சு முதல்வர் எடியூரப்பாவையும், பாஜக தலைவர்களையும் கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.ஏற்கனவே தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கமுடியவில்லை என்ற பெரும் அழுத்தத்தில் இருக்கும் எடியூரப்பாவுக்கு மடாதிபதியின் பேச்சு கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது