நடிகை குஷ்பூவின் கார் சாலையில் பயணித்தபோது விபத்து ஏற்பட்ட நிலையில் கடவுள் முருகன் தன்னை காப்பாற்றி விட்டார் என அவர் மனமுருகி உள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் நடிகை குஷ்பூ. இதை தொடர்ந்து இவர் ரியாலிட்டி ஷோக்கள், தொலைக்காட்சி சீரியல் உள்ளிட்டவற்றிலும் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் அரசியலிலும் ஆர்வம் காட்டி ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். பாஜக சார்பில் நடத்தப்படும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வரும் குஷ்பு, இன்று கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கடலூருக்கு காரில் சென்றார்.

அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கார் சென்ற போது பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி குஷ்பு சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரின் கண்ணாடி உடைந்தது. குஷ்புவிற்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் தற்போது குஷ்பூ தனது ட்விட்டர் பதிவில், ‘’வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து கடலூர் சென்று கொண்டிருந்த போது மேல்மருவத்தூர் அருகே விபத்தை சந்தித்தேன். டேங்கர்ர் லாரி ஒன்றின் மீது மோதியது. கடவுளின் ஆசிர்வாதத்தால், எனக்கு எந்த காயமும் இல்லை. காவல்துறையினர் இதை விசாரித்து வருகின்றனர். கடவுள் முருகன் எங்களை காப்பாற்றி விட்டார்’’என பதிவிட்டுள்ளார்.