கோவாவில் முதலமைச்சர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  கடந்த ஆண்டு, கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட பரீக்கர், அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். ஆனால், நேற்று காலை, பரீக்கரின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, உடல்நிலை மோசமடைந்ததாக, செய்திகள் வெளியாகின. இதனை கோவா அரசு மறுத்திருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மனோகர் பரீக்கர் சற்று முன்பு  காலமானார். 

இந்திய அரசியல் வரலாற்றில் ஐ.ஐ.டி., யில் படித்து, முதலமைச்சராக  முதல் அரசியல்வாதி என்ற பெருமையை மனோகர் பாரிக்கர் பெற்றுள்ளார். . நான்கு முறை கோவா முதலலமைச்சராகவும் , மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பாரிக்கர் பணியாற்றினார். 

1955 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மனோகர் பாரிக்கர் கோவாவில் பிறந்தார். அங்குள்ள லயோலா பள்ளியில் படித்தார். 1978ல் மும்பை ஐ.ஐ.டி.,யில் உலோகவியல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பின் சொந்த ஊருக்கு திரும்பி பிஸினஸ் செய்தார். கடந்த  1988ல் பாஜகவில் இணைந்தார்.

1994ல் கோவாவின் இரண்டாவது சட்டசபை தேர்தலில் முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். 1999ல் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 2000ல் முதன் முறையாக கோவா முதலமைச்சரானர். . 2012ல் இரண்டாவது முறையாகவும், 2012ல் மூன்றாவது முறையாகவும் மனோகர் பாரிக்கர்  முதலமைச்சரானார். இவரது மனைவி மேடா பாரிக்கர், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2000ல் மரணமடைந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந் போதுதான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக்  நடத்தப்பட்டது. 2017 மார்ச் 14ல் கோவாவில் பாஜக  ஆட்சியை தக்க வைப்பதற்காக, மீண்டும் இவரை பாஜக கோவா முதலமைச்சராககியது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணமடைந்தபோது, அவரது உடலை டெல்லியில் இருந்து ராமேஸ்வரம் வரை கொண்டு வந்து, அவரது இறுதிச் சடங்குகளை கூடவே இருந்து செய்து முடித்தவர் மனோகர் பாரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மனோகர் பாரிக்கர் காலமானார்.