குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி பொய்யான தகவல்களை பரப்பும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என கூறி 101 தேங்காயை  அர்ஜூன் சம்பத் உடைத்து வழிபாடு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோயிலில் நடைபெற்ற பூஜையில் அர்ஜூன் சம்பத் பங்கேற்றார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அதற்கு எதிராக போராடி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தி வரவேண்டுமென வேண்டியும் கோயிலில் 101 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்;- புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொய் பரப்புரை செய்யும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடுக்கவேண்டும் என 101 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தோம். மேலும், தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டியில் சாதியை சித்தரித்து காமராஜர் படத்தை போடுவது கண்டனத்திற்குரியது என்றார். 

ஜனவரி 12-ம் தேதி விவேகானந்தர் பிறந்த நாளில் மதுவிலக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும், பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி கள் இயக்கத்துடன் இணைந்து போராட்டம் நடத்தபட உள்ளதாகவும் தெரிவித்தார்.