உத்தரபிரதேசம் மற்றும் காஷ்மீரில் சிறுமிகள் பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டது பாஜகவுக்கு தேசிய அளவில்  பெரும் அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளதாக உளவுத்துறை அனுப்பிய ரிப்போர்ட்டால் மோடி குரூப் அதிர்ந்து போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமியை சிறுவர்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் கற்பழித்து கொலை செய்தது. அதை மறைக்க உள்ளூர் போலீசாருக்கு குற்றவாளிகள் பல லட்சம் ரூபாய் கொடுத்தனர். இந்த விவகாரத்தை கோர்ட்டு கையில் எடுத்ததால் 3 மாதத்துக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அதுபோல உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 17 வயது இளம்பெண் ஒருவர் தன்னை பங்கர்மாவ் தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் சிங், அவரது சகோதரர் அனில்சிங் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இந்த விவகாரமும் நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கற்பழிப்பு குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது சகோதரரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே காஷ்மீரில் சிறுமி கற்பழிக்கப்பட்டது தொடர்பாக மறுப்பு தெரிவித்து நடந்த ஊர்வலத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள்  சந்திரபிரகாஷ் கங்கா, லால்சிங் இருவரும் பங்கேற்று இருந்தனர். சிறுமி கற்பழிப்பு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர்கள் இருவரும்  தங்கள் அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்தனர்.

இதற்கிடையே உத்தரபிரதேசம், காஷ்மீரில் நடந்த கற்பழிப்பு சம்பவங்களில் குற்றவாளிகளை பாஜக  காப்பாற்றுவதாக காங்கிரஸ் புகார் தெரிவித்தது.  மேலும் நாடு முழுவதும் சிறுமி ஆசிபா கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசிபாவுக்கு நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த இரு சம்பவங்களும் பாஜக தலைவர்களுக்கு பெரும் நெருக்கடியையும், சிக்கலையிம் ஏற்படுத்தியுள்ளது.  உத்தர பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல். ஏ.வே கைதாகி இருப்பதால் பா.ஜ.க. தலைவர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

உத்தரபிரதேசம் போலவே காஷ்மீரில் உள்ள பா.ஜ.க.வுக்கும் கடும் நெருக்கடியான சூழ்நிலை எழுந்துள்ளது. காஷ்மீரில் முதலமைச்சர் மகபூபா தலைமையிலான பி.டி.பி. கூட்டணியில் பா.ஜ.க.வும் முக்கிய அங்கம் வகிக்கிறது.அப்போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக 2 பா.ஜ.க. மந்திரிகள் ஊர்வலத்தில் பங்கேற்றது தெரிய வந்தது. உடனே அவர் 2 மந்திரிகளையும் பதவி விலக உத்தரவிட்டார்.

மேலும் சிறுமி கற்பழிப்பு விவகாரம் காஷ்மீரில் ஆளும் பி.டி.பி.- பா.ஜ.க. கூட்டணி இடையே உரசலை ஏற்படுத்தி உள்ளது.  இதனிடையே இந்த இரு பாலியல் வன்கொடுமை தொடர்பாக உளவுத்துறை அளித்த ரிப்போர்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம், காஷ்மீரில் நடந்த கற்பழிப்பு சம்பவங்கள் பா.ஜ.க.வுக்கு தேசிய அளவில் தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாக உளவு துறை தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. இது அடுத்த ஆண்டு அநடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த உளவுத்துறை ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இதனால் பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.