மோடியை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பெண்ணை அவரது கணவர் பொது இடத்தில் திட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த நடிகர் பிரகாஷ்ராஜ் மக்களவை தேர்தலில் கர்நாடகா மாநிலம், மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் படப்பிடிப்புக்காக ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு ஓட்டலில் தங்கியிருந்த பிரகாஷ் ராஜிடம் ஒரு பெண் அனுமதி கேட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டார். இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர் அவரது மனைவியையும், குழந்தையையும் கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார். 


பிரகாஷ் ராஜ் தொடர்ந்து மோடியை விமர்சனம் செய்து வருவதால், அவருடன் செல்ஃபி எடுப்பது தவறு எனக் கூறி கோபப்பட்டுள்ளார். கணவர் பொது வெளியில் மற்றவர்கள் முன் திட்டியதால் அந்த பெண் அங்கு அழுதிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ்ராஜ் மன உளைச்சலுடன், அந்த பெண்ணின் கணவரை தனியே அழைத்து, ''என்னையும், மோடியையும் முன்னிறுத்தியா நீங்கள் திருமணம் செய்தீர்கள். பொது இடத்தில் மனைவியை இப்படி அசிங்கப்படுத்துவது தவறு’’ என அறிவுறுத்தி இருக்கிறார். அந்த சம்பவத்தை பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.