அதிமுக பொதுச்செயலாளர் அமைச்சர் செங்கோட்டையன் வர வேண்டும் என காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் இருக்கக்கூடாது என்று மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும், அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா கூறினார். ஜெயலலிதாவுக்கு இருந்த ஆளுமைத் திறன் இப்போது கட்சிக்குள் யாருக்குமே இல்லை. அதனால், பொதுக்குழுவை உடனே கூட்ட வேண்டும் என்றார். ராஜன் செல்லப்பா கூறிய கருத்தையே குன்னம் அதிமுக எம்.எல்.ஏ. ராமசந்திரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

 

இதனிடையே கட்சி விவகாரங்கள் தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாம் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுக்கு பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகம் வெளியே முதல்வர் பழனிசாமியே அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஓட்டப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுச்செயலாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே அதிகார யுத்தம் நிலவி வரும் நிலையில், இந்த போஸ்டர் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.