நடிகை கவுதமி திடீரென கமலஹாசனை விட்டு பிரிவதாக அறிவித்தார்.
13 ஆண்டுகால இல்லற வாழ்க்கையை உதறி தள்ளி கவுதமி வெளியேற காரணம் அவர் பாஜகவில் இணைய முடிவெடுத்ததாகவும் , அதற்கு கமல் தடை போட்டதாகவும் தனது வளர்ச்சியை கமல் தடுப்பதாக எண்ணி கவுதமி வெளியேறுகிறார் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது.

நடிகர் கமலஹாசன் முதல் மனைவி வாணியை பிரிந்த பின்னர் சில காலம் கழித்து சரிகாவை 1984 ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. பின்னர் இருவரும் பிரிந்தனர். ஆளுக்கொரு பெண் குழந்தையை பிரித்து கொண்டனர். பின்னர் 2003 ஆம் ஆண்டு கவுதமி கமலுடன் இணைந்தார்.
கவுதமி நடிகையாக இருந்த கால கட்டத்தில் மிகப்பெரிய வட மாநில தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதே நேரத்தில் அவர் பாஜகவில் இணைந்தார்.
அவருக்கு பாஜக இளைஞர் அணியில் அகில இந்திய அளவில் பதவி வழங்கப்பட்டது. பாஜகவில் வெங்கய்ய நாயுடுவுக்கு கவுதமி மிக நெருக்கமானவர்.
பின்னர் கவுதமிக்கு குழந்தை பிறந்தது. அதன் பின்னர் கணவருடன் விவாகரத்து செய்துகொண்ட கவிதமி பாஜகவிலிருந்தும் விலகினார். அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு முதல் கமலுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் , கவுதமியின் மகள் சுப்புலட்சுமி , கவுதமி , கமல் அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.
கமலுக்கு மூன்று மகள் என்பது போல் சுப்பு லட்சுமியை ஒரு மகளாகவே கமல் பார்த்தார். இன்னும் சொல்லப்போனால் அவரது சொந்த மகள்களை விட கவுதமியின் மகள் மீது தன் அதிக பாசம் கமலுக்கு என திரையுலகில் சொல்வார்கள்.

அந்த அளவுக்கு பாசமாக இருந்த குடும்பத்தில் குண்டு போட்டது யார் என்று அரசல் புரசலாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை கவுதமி கடந்த பல ஆண்டுகளாக கமலுடன் உரசலில் இருந்து வந்துள்ளார்.
கமலஹாசன் தீவிர நாத்திகர் , நாத்திகர் எனபதை விட பகுத்தறிவுவாதி என்று அழைக்கப்படுவதையே விரும்புவார்.
ஆனால் கவுதமி அதற்கு நேர் எதிர் , வர்ணாசிரம தத்துவத்தில் ஊறிய பாஜகவின் ஆதரவாளர்.
சமீப காலமாக தனக்கென ஒரு வாழ்க்கை அமைய வேண்டும், தான் அரசியல் ரீதியாக பெரிய ஆளாக வர வேண்டும் என்ற எண்ணம் சமீப காலமாக கவுதமி மனதில் வேறூன்றி வருகிறது.
கவுதமி வற்புறுத்தலால் கமல் மோடியின் ஸ்வச்பாரத் தூதராக நியமிக்கப்பட்டார். இது பலரது புருவங்களை உயர்த்தியது. கமலுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
அதனால் தற்போது பாஜகவில் உள்ள பழைய தொடர்புகளை கவுதமி புதுப்பிக்க துவங்கி உள்ளார். இது கமலஹாசனுக்கு பிடிக்கவில்லை. பொதுவாக கமல் அரசியலை விரும்பாதவர் , அதனால் தடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கமல் தடுப்பதை தனது வளர்ச்சியை தடுப்பதாக கவுதமி எண்ணியதால் விரிசல் அதிகமாகி உள்ளது.
எதையும் இலகுவாக எடுத்துகொள்ளும் கமல் கவுதமியின் ஆட்சேபனையை கண்டுகொள்ளவில்லை , இதற்கிடையே இந்த பிரச்சனையின் முத்தாய்ப்பாக கவுதமி கடந்த வாரம் தான் நடத்தும் ” லைஃப் அகெய்ன் ‘’ ஃப்வுண்டேஷன் வேலையாக தனது பழைய நண்பர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்துள்ளார்.
வெங்கயா நாயுடு அப்போது அவருக்கு சில வாக்குறுதிகளை அளித்ததாக கூறப்படுகிறது. கட்சியில் கவுதமிக்கு முக்கிய பொறுப்பு வாங்கித்தருவதாக அப்போது வெங்கயா நாயுடு வாக்குறுதி அளித்திருக்கலாம் என தெரிகிறது.

அதன் பின்னர் பிரதமரையும் கவுதமி சந்தித்தார். மேலுக்கு அவர் தனது ஃபவுண்டேஷனுக்காக சந்தித்தாக கூறப்பட்டாலும் , பாஜகவில் தமிழகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கி முழு நேர அரசியல்வாதியாக அமரும் கவுதமியின் எண்ணத்துக்கு அங்கு தூபம் போடப்பட்டிருக்கலாம்.
இதற்கு கமலஹாசனின் உறவு இடயூறாக இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது உண்மையானால் விரைவில் கவுதமிக்கு பாஜகவில் பெரிய பதவி அளிக்கப்பட்டு கட்சியில் இணைத்து கொள்ளப்படுவார்.
இதற்கு ஆதாரமாய் கவுதமி வெங்கயா நாயுடுவை சந்தித்த நிகழ்வை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதை காட்டுகிறார்கள் விபரமறிந்தவர்கள்.
தான் நடத்தும் வெங்கயா நாயுடுவுடன் தான் சந்தித்த போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவுதமி தனக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் உற்சாகம் அளித்த வெங்கயா நாயுடுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆகவே கமல் கவுதமி பிரிவுக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என்பதே சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக உள்ளது.
