மோடி, பாஜக, மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் மிகத் தீவிரமாக கருத்துகளை கூறி வரும் கமலுக்கு எதிராக கவுதமியை பாஜக களம் இறக்கியுள்ளது.

கமலுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்ததுடன் அவருடன் பத்து வருடங்களுக்கும் மேலாக துணைவியாக இருந்தவர் கவுதமி. சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக கமலிடம் இருந்து கவுதமி பிரிந்தார். பிறகு சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக முயற்சித்த கவுதமிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பினார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை கவுதமி சந்தித்து பேசினார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கையோடு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கொளுத்திப் போட்டார். இதனால் கவுதமிக்கு எதிராக அப்போதைய அதிமுகவினர் கொந்தளித்த நிலையில், அதனை வைத்து தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து தனது மைலேஜை கவுதமி ஏற்றினார். பிறகு திடீரென காணாமல் போனவர் தற்போது மீண்டு வந்துள்ளார்.

கடந்த மாதம் சென்னையில் பாஜக சார்பில் முப்பெரும விழா நடைபெற்றது. இந்த விழாவில் கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக வேட்பாளர் தேர்விலும் கவுதமிக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக கவுதமி களம் இறங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் சிலர் எதிர்ப்பதாக கவுதமி கூறியுள்ளார்.

கவுதமி கூறிய அந்த சிலரில் நடிகர் கமல் உள்ளிட்டோரும் அடங்குவர். ஏனென்றால் அந்த சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதிமய்யம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில் தனது முன்னாள் வாழ்க்கை துணைவருக்கு எதிராகவே கவுதமி பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. அரசியல் நோக்கர்களும் கூட கவுதமி பேசிய விஷயம் பொதுவாக இருந்தாலும் கூட அவர் பயன்படுத்திய வார்த்தைகள் கமலை சீண்டக்கூடிய வகையிலானது என்று கூறுகிறார்கள்.

அந்த வகையில் பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கும் கமலை விமர்சிக்க கவுதமியை அந்த கட்சி களம் இறக்கியுள்ளதா சொல்கிறார்கள். விரைவில் கவுதமிக்கு பாஜக செய்தி தொடர்பாளர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.