நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த 17வது மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், மீண்டும் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. 

தேர்தல் நடந்த 542 தொகுதிகளில் 341 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெறும் 89 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 112 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. 

டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். எனவே காம்பீர் எம்பி ஆவது உறுதியாகிவிட்டது. 

கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு அறிவித்த காம்பீர், பாஜகவில் இணைந்தார். பிரபலங்களை தேடிச்சென்று சீட் கொடுக்கும் பாஜக, காம்பீரை அம்போனு விட்ருமா என்ன..? காம்பீருக்கு டெல்லி கிழக்கு தொகுதியில் சீட் கொடுத்தது. கிரிக்கெட்டில் அதிரடி காட்டிய காம்பீர், அரசியலிலும் அதிரடி காட்டியுள்ளார். அரசியலில் இறங்கிய முதல் பந்துலயே சிக்ஸர் அடித்துள்ளார் காம்பீர்.