கைது செய்ய வந்த 8 போலீசாரை சுட்டுக் கொன்ற பயங்கர ரவுடி விகாஸ் துபே இன்று காலை என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொலை, கொள்ளை என 60-க்கும் மேற்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த  பிரபலரவுடி விகாஷ் தூபேவை  கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்ய  போலீசார்  அவரது சொந்த கிராமமான பிக்ருவுக்கு சென்றனர், அப்போது போலீசார் ரவுடியை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சி செய்த நிலையில், அவனுடன் இருந்த கூட்டாளிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை துணை  சூப்பிரண்டு உள்பட 8 போலீசார் சுட்டு கொல்லப்பட்டனர். விகாஷ் தூபே அங்கிருந்து தப்பினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவரையும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க 25க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர். இதனையடுத்து விகாஸ் தூபே தங்கியிருந்த வீட்டையும் புல்டோசர் வைத்து இடித்து போலீசார் தரைமட்டமாக்கினர். உடனடி நடவடிக்கையாக விகேஸின் 2 கூட்டாளிகள் கடந்த-3 ஆம் தேதி என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். விகாஸின் வலதுகரமாக செயல்பட்ட தயா சங்கர் என்பவரையும்,  போலீசார் பிடிக்க வருவது குறித்தும் தூபேவுக்கு தூப்பு கொடுத்து வந்த காவலர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் விகாஸ் தூபே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போலீசுக்கு தண்ணி காட்டி வந்தார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜையினியில் உள்ள மகாகாளி கோவிலுக்கு தனது கூட்டாளிகளுடன் அவர் வந்ததாக கூறப்படுகிறது.

அவர் முன்கூட்டியே கோவிலில் தரிசனத்திற்காக டோக்கன் பெற்றதாக தெரிகிறது, இந்நிலையில் அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு தயார் நிலையில் இருந்தனர், அப்போது தனது கூட்டாளிகள் இருவருடன் விகாஸ் கோயிலுக்கு வந்தபோது அங்கிருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மத்தியபிரதேசம் உஜ்ஜையில் மகாகாளி கோவிலில் வைத்து கைதுசெய்யப்பட்ட  விகாஸ் தூபேவை  இன்று காலை போலீசார் கான்பூருக்கு அழைத்து வந்தனர், அப்போது வரும் வழியில் பாதுகாப்பு பணிக்கு வந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது, இந்த விபத்தை பயன்படுத்தி தூபே போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்றதாகவும், அப்போது அங்கு நடைபெற்ற என்கவுண்டரில் விகாஸ் தூபே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.