தேர்தல் நேரம் வந்துவிட்டாலே....ஸ்டாலின் சொல்வது போல், தலைவர்கள் ஆளாளுக்கு மற்றவர்கள் மீது ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று குற்றச்சாட்டுகளை அள்ளி வீச துவங்கிவிடுவார்கள். அது உண்மையா, பொய்யா, அரசியல் உள்நோக்கில் போடப்பட்டதா இல்லை ஆதாரத்தோடு பதியப்பட்டதா! என்றெல்லாம் பார்க்காமல் பழைய சென்சேஷனல் விஷயங்களைத் தோண்டி எடுத்து புது பெயிண்ட் அடித்து தொங்க விடுவார்கள்.

 

அப்படித்தான், தமிழக  பி.ஜே.பி.யின் செய்தித் தொடர்பாளரான நாராயணன், ஒரு அரசியல் விவாதத்தின் போது ’ராகுல் காந்தி கூட்டு பலாத்கார குற்றம் சாட்டப்பட்டவர்.’என்று ஒரு நியூக்ளியர் குண்டை பற்ற வைத்தார். அது வெடித்த அதிர்வு டெல்லி வரை ஆட்டியெடுத்துக் கொண்டிருக்கிறது.  தேர்தல் நேரத்தில், பிரதமர் வேட்பாளர்! என்று சுட்டிக் காட்டப்படும் நபர் மீது எதிர்கட்சியின் முக்கிய நபர் இப்படியொரு குற்றச்சாட்டை சொல்லியிருப்பது எவ்வளவு சென்சேஷனலானது?! இப்படியொரு குற்றச்சாட்டை எந்த அடிப்படையில் நாராயணன் கிளப்பினார்? என்று காங்கிரஸின் டெல்லி தலைமை பற்றி எரிந்து கேட்டது. 

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரோ நாராயணனனை வறுத்தெடுக்க துவங்கியிருக்கும் நிலையில், இதுபற்றி பேசும் தமிழக பி.ஜே.பி.யினர்....2006ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சுகன்யா தேவி எனும் இளம்பெண்ணை சிலர் கூட்டு பலாத்காரம் செய்ததாக சமாஜ்வாதி கட்சி சார்பில் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களில் ராகுலும் ஒருவர், ஆனால் போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை வைத்துத்தான் நாராயணன்  சாடினார்! என்று விளக்கம் கொடுத்தனர். 

நாராயணனும் “அரசியல் காரணங்களுக்காக ஜோடிக்கப்பட்ட வழக்கு! என்று அமித்ஷா மீதான கொலைக் குற்றச்சாட்டை நீதிமன்றமே சொல்லிவிட்டது. ஆனாலும் காங்கிரஸார் அமித்ஷாஜியை கொலைக்குற்றவாளி என்று சொல்லியே விமர்சிக்கின்றனர். அந்த வகையில்தான் நானும் பதிலடி தந்தேன். கூட்டு பலாத்கார வழக்கில் ராகுல் குற்றம் சாட்டப்பட்டவர்தான் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் நான் வைத்துள்ளேன்!” என்று அழுத்தமாக பேசியுள்ளார். பழிக்குப் பழியாக பேசினேன்! என்று நாராயணனே சொல்லிய பிறகும், காங்கிரஸ் பொங்குவது அடங்கவில்லை. ஆனாலும் இது கொஞ்சம் பகீர் விவகாரம்தான்!