கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு தடை விதித்தது. இந்தத் தடைக்கு இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது. விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசை பாஜக விமர்சித்துவருகிறது.
இந்நிலையில் விநாயகர் சிலை வைக்க விதிக்கப்பட்டுள்ள தடைக்கு பாஜகவும் இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா தொற்று காரணமாக சுதந்திர தின கொண்டாட்டங்களே கட்டுபாட்டுடன் நடக்கின்றன. இதே காரணத்திற்காகத்தான் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. உலகம் முழுவதுமே வழிபாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் தடையை மீறுவோம் என்றும், பொது இடங்களில் லட்சம் விநாயகர் சிலைகள் வைப்போம் என்றும் இந்து முன்னணி செய்துள்ள அறிவிப்பு ஆன்மீகம் அல்ல, கடைந்தெடுத்த மதவெறி அரசியலே. இச்செயல் வன்மையாக கண்டனத்திற்குரியது” எனப் பதிவில் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.