ganapathy tear two thousand rupees notes and vigilance find out

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, லஞ்சம் பெற்று கைதாகியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என பணியின் நிலைகளுக்கு ஏற்ப லஞ்சம் பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார் கணபதி.

இதுதொடர்பாக பலமுறை பலர் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு பல புகார்களை கொடுத்துள்ளனர். ஆனால், கணபதிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் லஞ்ச ஒழிப்பு துறையினரால் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.

அதற்காக பொறி வைத்து காத்திருந்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் கணபதியின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சில ஊழியர்களிடமிருந்தும் ஆதாரங்களை திரட்டி வந்துள்ளனர். சரியான தருணத்திற்காக காத்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையிடம், சுரேஷிடம் லஞ்சம் பெறும் போது கணபதி மாட்டிக்கொண்டார்.

வேதியியல் துறை உதவி பேராசிரியராக சுரேஷ் நியமனத்திற்கு 30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார் கணபதி. இதுதொடர்பகா சுரேஷ் அளித்த புகாரின்பேரிலும் ஏற்கனவே திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையிலும் உயர்கல்வித்துறை மற்றும் ஆளுநர் மாளிகையிடம் அனுமதி பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை, நேற்று அதிரடியாக பாரதியார் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தியது. 

அப்போது லஞ்சம் பெற்ற துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கையும் களவுமாக கைது செய்தனர். கணபதி லஞ்சம் பெறுவதற்கு இடைத்தரகராக இருந்த வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். ஆனால், பல்கலைக்கழகத்தில் உள்ள கணபதியில் அலுவலகம், கணபதியின் வீடு ஆகிய இடங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து சோதனை நடத்தினர். திருச்சியில் உள்ள கணபதியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, தடயத்தை அழிப்பதற்காக, துணைவேந்தர் கணபதி, 56 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 2,000 ரூபாய் நோட்டுகளை கிழித்து அவற்றை கழிவறையில் போட்டுள்ளார். ஆனால், இதற்கெல்லாம் அசராத லஞ்ச ஒழிப்புத்துறை, பிளம்பர்கள் உதவியுடன் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

கடந்த 2016ம் ஆண்டு பேராசிரியர் பணிநியமனத்தில் நடந்த ஊழல் குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 13 மணி நேர விசாரணைக்குப் பிறகு, கணபதி மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரும் சிறப்பு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, இருவரையும் வரும் 16ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.