கஜா புயலால் பாதித்த பகுதிகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார். முதலாவதாக தரங்கம்பாடி கடற்கரை பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

கஜா புயலால் பாதித்த பகுதிகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார். முதலாவதாக தரங்கம்பாடி கடற்கரை பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். 

இதையடுத்து அக்கரைப்பேட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட நாகை மாவட்ட பகுதிகளில் கடற்கரையோர பகுதிகளை பார்வையிடுகிறார். இதையடுத்து தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புயல் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிடுகிறார். புயல் பாதித்த தரங்கம்பாடியில் மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த மு.க.ஸ்டாலின், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மீனவர்களிடம் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். 

பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தை நோக்கி வந்த கஜா புயல் கடுமையாக தாக்கியதில் கடலூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. இந்த பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் 81 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்கம்பங்கள், மரங்கள், பயிர்கள் நாசமாயின. 

தற்போது அங்கு நிவாரண பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ’நிவாரண பணிகளில் திமுகவினர் ஈடுபட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு சீக்கிரம் உதவிக்கரம் நீட்டமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் உதவிகள் அவர்களை சென்றடையவேண்டும்’ என்று திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிவாரண பணிகளை பார்வையிட்ட அவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.