கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மறுநாள் ஆய்வு செய்ய உள்ளார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஹெலிகாப்டரில் சென்றதற்கு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து தற்போது முதல்வர் ரயிலில் செல்ல திட்டமிட்டுள்ளார்.

 

கஜா புயல் கடந்த 15-ம் தேதி இரவு நாகை- வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் புயல் ருத்ரதாண்டவம் ஆடியது. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் பெருத்த சேதம் ஏற்பட்டது. மின் இணைப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. 

இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி கடந்த 20-ம் தேதி சென்றார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற முதலமைச்சர் அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றார். புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் இருந்தனர். நிவாரண உதவிகளையும் முதல்வர் வழங்கினார். 

பிறகு நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்ல முதலமைச்சர் திட்டமிட்டிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக பயணத்தை ரத்து செய்து, மீண்டும் சென்னை திரும்பினார். இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு பணிக்கு ஹெலிகாப்டரில் சென்றது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. 

இந்நிலையில் நாகை, திருவாரூர் பகுதிகளை பார்வையிட நாளை இரவு ரயில் மூலம் திருவாரூர் செல்கிறார். ஏற்கெனவே ஹெலிகாப்டர் மூலம் சென்றது விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது ரயில் ஆய்வுப் பணிக்குச் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.