மக்கள் தலைவர் என்று தமிழக மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் ஜி.கே.மூப்பனார். மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்த இவர் ஒரு முறை  காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி திமுகவுடன் இணைந்து ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தவர்.


இதே போல் ராஜிவ் காந்தி  மறைந்தபோது ஒரு முறை பிரதமர் ஆகும் வாய்ப்பு கூட மூப்பனாருக்கு கிடைத்தது. ஆனால் அதை திமுக தலைவராக இருந்த மறைந்த கருணாநிதி தடுத்துவிட்டதாக பேசப்பட்டது.

இந்நிலையில் மூப்பனார் மறைந்த பிறகு அவரது மகன் ஜி.கே.வாசன், அக்கட்சிக்கு தலைமை ஏற்றார். பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் தமாகவை இணைத்தார்.மேலும் காங்கிரஸ் கட்சியில், பத்தாண்டுகள், மத்திய அமைச்சராகவும், தமிழக காங்கிரஸ் தலைவர், அகில இந்திய செயலர், இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி., என, பல பதவிகளை வகித்தவர், வாசன். 

காங்கிரஸ் தலைவர், ராகுலுக்கும், வாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், காங்கிரசை விட்டு விலகிய வாசன், த.மா.கா.,வை மீண்டும் துவக்கினார்.

இதனிடையே மக்களவைத் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, தஞ்சாவூர் தொகுதியில், சுயேச்சை சின்னத்தில், த.மா.கா., போட்டியிட்டுள்ளது.அதில் வெற்றி பெற்றால், மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும், தனக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியும், மத்திய அமைச்சர் பதவியும் தரும் கட்சிக்கு ஆதரவு அளிக்கவும், அந்த கட்சியுடன், தமாகவை இணைக்கவும், வாசன் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் தொடக்கமாக பாஜக தலைமையுடன், வாசன் பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  அரவக்குறிச்சியில் பிரசாரத்தை முடித்து, டெல்லிக்கு சென்ற வாசன், அங்கு, பாஜக  முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.