வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40  மக்களவைத் தொகுதிகளில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக  தலைமையிலான இரு மெகா கூட்டணிகள்  அமைந்துள்ளன. 

திமுக கூட்டணியில் திமுகவுக்கு 20 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே போல் இடது சாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுளளது.

இதே போல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் அதிமுக 20, பாமக 7, பாஜக 5, தேமுதிக 4,  புதிய தமிழகம் 1, புதிய நீதி கட்சி 1, என்.ஆர்.காங்கிரஸ் 1 , தமிழ் மாநல காங்கிரஸ் 1 என போட்டியிடுகின்றனர்.

இந்த கூட்டணியில் கடைசியாக இடம் பெற்ற தமாக ஒரு எம்.பி.சீட்டுக்கு ஒத்துக் கொண்டது அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொடக்கத்தில் 2 எம்.பி. தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வேண்டும் என்று ஜி.கே.வாசன் அடம் பிடித்து வந்தார்.

இதற்கு உடன்படாத அதிமுக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே இருந்தது. ஆனால் ஜி.கே.வாசனின் பிடிவாதம் தளராத  நிலையில், பிரச்சனையை  பாஜக தலைவர் அமித்ஷா கைகளில்  ஒப்படைத்தார் எடப்பாடி பழனிசாமி.

இதையடுத்து ஜி.கே.வாசனுடன் பேசிய அமித்ஷா, தற்போது இந்த ஒரு தொகுதியைப் பெற்றுக் கொள்ளுங்கள், தேர்தல் முடிவடைந்து ஆட்சி அமைக்கும் போது உங்களுக்கு ஒரு கேபினட் அமைச்சர் பதவி வழங்குவோம் என உத்தரவாதம் அளித்துள்ளார்.

இதன் பிறகே அந்த ஒரு சீட்டுக்கு ஒத்துக் கொண்டு ஜி,கே.வாசன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.