கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் குடியாத்தம் நகராட்சியில் ஜூலை 24 முதல் 31ம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னையில் மட்டுமே அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வேலூர்,திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,75,678 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கை 2,551ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு அதிகரித்த போதிலும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் குடியாத்தம், புதுக்கோட்டை நகராட்சி ஆகிய பகுதிகளில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குடியாத்தம் நகராட்சியில் ஜுலை 24 முதல் 31-ம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  குடியாத்தம் நகராட்சியில் காய்கறிக் கடை, இறைச்சி கடைகள், மீன் கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ஜுலை 24 முதல் 31ம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் 24 மணி நேரமும் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.