கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- ராயபுரம் மண்டலத்தில் வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. தனிமைப்படுத்துவோர் வெளியே சென்றால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா அதிகமுள்ள பகுதியில் ஒருவர் இரண்டு முறை தடுப்பைத் தாண்டி வெளியே சென்றால் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஐந்து நாள் சீரகம் குடிநீரை மக்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள், உப்பு தலா ஒரு சிட்டிகை சேர்த்துக் காய்ச்சி வடிக்கட்டி பருகலாம்" என்றார். 

அம்மா உணவகம் மூலம் கபசுர குடிநீர் காய்ச்சி கொடுக்கப்படுகிறது. கிருமி நாசினி தெளிப்பு தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு கூறினாலும் அதனை நாம் கைவிடவில்லை.

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என முதலமைச்சர் கூறியிருக்கிறார். தன்னிச்சையாக ஊரடங்கை அறிவிக்க முடியாது. மருத்துவ வல்லுனர் குழு அறிக்கையாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர், அமைச்சரவை கூடியே மீண்டும் ஊரடங்கா என்பது குறித்து முடிவு செய்ய முடியும் என கூறினார்.