அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை மேற்கொண்டார்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 9ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்தது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 36 ஆயிரத்தை கடந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கொரோனா தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஆகஸ்ட் 9ம் தேதி வரை 10வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆகஸ்ட் 9ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 11வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார் அதேப்போல், தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாகவும், மேலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், மாவட்டந்தோறும் தொற்று எண்ணிக்கை, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை, 3ம் அலை வராமல் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.