நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து உறுப்பினர்கள் பதவியேற்ற நிலையில், யாருக்கு அதிக அதிகாரம்  என்ற  போட்டி மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கிடையே தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் 90 சதவிகித இடங்களை கைப்பற்றின. இதனையடுத்து நகர்ப்புற பதவி இடங்களை கூட்டணி கட்சிக்கு பங்கீட்டு வழங்கப்பட்டது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களில் திமுகவினரே பெரும்பாலான இடங்களில் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்தநிலையில் அந்த பிரச்சனையை சரி செய்ய திமுக தலைமை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில், மேயர் மற்றும் துணை மேயர் பதவி ஏற்ற நிலையில் தங்களது பணிகளை துவங்கியுள்ளனர். சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு கொரோனா பாதிப்பு காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டி கேடயம் வழங்கினார். இதே போல துணை மேயராக பதவியேற்ற மகேஷ்குமார் தனது முதல் பணியாக அடையாறு மண்டலத்தில் கொசு ஒழிப்பு பணிகளை பார்வையிட்டு கொசு ஒழிப்பை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதே போல பல மாநகராட்சி மற்றும் நகராட்சியில் பதவியேற்றுள்ளவர்கள் தங்கள் பணிகளை தொடங்கியுள்ளனர்.


இந்தநிலையில் தான் தற்போது மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் அதிகார போட்டி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நகர்ப்புற தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினரே மக்கள் பிரிதிநிதியாக இருந்து வந்தார். இந்தநிலையில், அந்த இடத்தில் பங்கீட்டு கொள்ள தற்போது மேயர் வந்துள்ளது தங்களது அதிகாரத்தை குறைத்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். இதன் முதல் நிகழ்வாக திருப்பூர் மாநகராட்சியில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி மேயராக, திமுகவைச் சேர்ந்த தினேஷ்குமார் பதவியேற்றுள்ளார்.இதனையடுத்து தனது முதல் நிகழ்ச்சியாக தென்னம்பாளையத்தில் கழிவு நீர் கால்வாய் துார் வாரும் பணி பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பணிகளை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார். அப்போது தொலைக்காட்சி செய்தியாளர்கள் மேயரிடம் பேட்டிக்காக மைக்கை கொண்டு சென்றனர். மேயர் தினேஷும் பதிலளிக்க தொடங்கினார். அப்போது திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் மட்டும் தான் முக்கியமா? சட்டமன்ற உறுப்பினர் வேண்டாமா? என பத்திரிக்கையாளர்களை பார்த்து கேட்டார். 


இதனையடுத்து குடிநீர் வழங்கும் திட்டம் தொடர்பாக பேட்டியளித்துக்கொண்டிருந்த மேயர் தினேஷ், போர்க்கால அடிப்படையில் பாதாள சாக்கடை திட்டமும், சேதமடைந்த சாலையும் சீரமைக்கப்படும் என கூறினார். தொடர்ந்து குடிநீர் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மேயர் தினேஷ், தினந்தோறும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அப்போது குறுக்கிட்ட திருப்பூர் சட்ட மன்ற உறுப்பினர் செல்வராஜ் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டும் தான் குடிநீர் வரும் என கூறினார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேயர் தினேஷ் என்ன சொல்வதென்று தெரியாமல் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கூறிய தகவலுக்கு சரியென்று கூறிவிட்டு சென்றார். இந்த சம்பவம் ஆரம்பம் தான் என தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர்கள் மற்ற, மற்ற மாநகராட்சியில் இதே போன்று நிலை விரைவில் வெளிப்படும் என தெரிவித்தனர்.