சட்டமன்ற தேர்தலுக்கு முக்குலத்தோர் புலிப்படைத் தயாராக இருப்பதாக எம்.எல்.ஏ., கருணாஸ் தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருணாஸ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை கிங்ஸ் அரசு மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை பெற்றார். அவர் முழு நலமடைந்து கடந்த 17 ஆம் தேதி வீடு திரும்பினார். பின்னர் தன்னை குணமாக்கிய மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோருக்கும் அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘’எனக்கு கொரோனா பாதித்தவுடன் தகுந்த சிகிச்சை கிடைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தேன். நோய் தொற்றில் இருந்து குணமடையச் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. தொகுதி சார்த்த கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்துள்ளேன். வரும் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படையின் பங்களிப்பு எதிர்பாராத விதத்தில் இருக்கும்’’என அவர் தெரிவித்தார்.