கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். பள்ளபட்டி அண்ணா நகர் பகுதியில் பேசுகையில், சமரச இந்தியாவாக சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூன்று வர்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியரின் ஆசை என்று தெரிவித்தார்.

தீவிரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்தப் பேச்சு பாஜக மற்றும் இந்து முன்னணியினரிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.