இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் மார்ச் 25, 2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அமலில் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவரும் நிலையில் நோய்த்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டும், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ஓரிரு நாட்களில் கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டு, அந்தந்தப் பகுதிகளிலேயே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி, நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும் தீவிர நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகின்றது.


அரசு மருத்துவமனைகளில் பிராண வாயு (oxygen) இருப்பு போதுமான அளவு இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளிலும் பிராணவாயு இருப்பு கண்காணிக்கப்பட்டு தடையின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தேவைக்கேற்ப பிராண வாயுவைக் கூடுதலாக உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், பிராண வாயுவை உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் அளிக்க உத்தரவிடப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்துவது அவசியமான உத்தியாகக் கருதப்படுவதால் கீழ்க்காணும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
* தற்போது 45 வயது முதல் 59 வரை 13 சதவீதம், 60 வயதுக்கு மேல் 18 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 45 வயதிற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும்.
* 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதித்துள்ளது. எனவே, முக்கிய தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் (Hotels), உணவகங்கள் (Restaurants) போன்றவை தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து 100 சதவீதம் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க ஊக்குவிக்கப்படுவதுடன், ஏற்கனவே அறிவித்தபடி இலவசமாக பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பொருட்டு 18 முதல் 45 வயது வரை உள்ள அனைத்துக் கட்டிடத் தொழிலாளர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனைக் கடை வியாபாரிகள், மாநிலப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள், அனைத்துப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அனைத்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு முன்னுரிமையில் தடுப்பூசி இலவசமாக வழங்க, இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மே 1ஆம் தேதி முதல் நடத்தப்படும். அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். தமிழ்நாட்டில் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்படும்.
* நோய்த்தொற்று உடையவர்களுடன் தொடர்புடையவர்களை உடனுக்குடன் கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்தினால்தான் (contact tracing) நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க இயலும். எனவே, இந்தப் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும்.
* கொரோனா (RT-PCR) பரிசோதனைகள், தேவைக்கேற்ப மேலும் உயர்த்தப்படும். இதன் மூலம் நோய்த்தொற்று விகிதம் அனைத்து மாவட்டங்களிலும் 10 சதவீதத்திற்குக் கீழ் குறைக்கப்படும்.
* மாவட்டந்தோறும் நோய்ப் பரவல் நிலைக்கு ஏற்ப, மருத்துவக் கட்டமைப்பு வசதிகளும், பிராணவாயு வசதியுடன் கூடிய படுக்கைகளையும் ஏற்படுத்தி தேவையான மருந்துகளையும் வழங்க மருத்துவ மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி 60 சதவீதத்திற்கு மேல் (Herd Immunity) உருவாக்க, சிறப்பு முகாம்கள் நடத்தி 18 வயதிற்கும் மேலானவர்களுக்கு அளிக்கப்பட உள்ள தடுப்பூசி மூலம் ஏற்படவுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அளவையும், ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்களிடம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அளவையும் சேர்த்து 60 சதவீதத்திற்கு மேல் எதிர்ப்பு சக்தியை மக்களிடையே ஏற்படுத்துவதே முக்கியக் குறிக்கோள்.
இந்நிலையை மாநிலம் எட்டிவிட்டால் நோய்ப் பரவல் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படும். இதையே முக்கிய உத்தியாகக் கொண்டு செயல்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது''. என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.