கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருந்தது. அப்போது அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த சசிகலா மற்றும் முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ்சை மிகவும் கேவலமாக விமர்சித்து இளம் பெண் ஒருவர் கோஷமிடும் வீடியோ வாட்ஸ் ஆப்பில் வைரல் ஆனது. சசிகலாவை அவள் இவள் என்றும், ஓ.பி.எஸ்சை அவன் இவன் என்றும் ஒருமையில் அந்த பெண் பேசிய வீடியோ பின்னர் ஊடகங்களிலும் ஒளிபரப்பானது.
   
அப்போதும் கூட சமூக வலைதளங்களில் அந்த பெண்ணை வீரத்தமிழச்சி என்று பலர் புகழ்ந்து பதிவுகளை வெளியிட்டனர். ஆனால் அந்த பெண்மணி யார், எந்த ஊர் என்கிற தகவல் வெளியாகவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அந்த பெண் தாக்கப்பட்டதாகவும், வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் வாட்ஸ் ஆப்பில் வதந்திகள் பரவின. பின்னர் தான் அந்த பெண் ஜூலி என்பது தெரியவந்தது.


   
தான் விளையாட்டிற்காக கோஷம் போட்டது இந்த அளவிற்கு விபரீதம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை என்று ஜூலி மன்னிப்பும் கோரினார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படியாக சமூக வலைதளங்களில் ஏதாவது வித்தியாசமாக செய்தால் விளம்பரம் கிடைக்கும் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பு பலரிடம் இருக்கிறது.
   
இப்படித்தான் மாணவி சோஃபியாவும் வீண் விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகும் அளவிற்கு விபரீத்தில் சிக்கியுள்ளார் என்கின்றனர் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் சில நடுநிலையாளர்கள். விமானத்தில் வைத்து தமிழிசையை பார்த்த மாத்திரத்தில் அவர் பா.ஜ.கவிற்கு எதிராக கோஷம் எழுப்பியிருந்தால் அது உணர்ச்சியின் வெளிப்பாடாக இருந்திருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


   
ஆனால் விமானத்தில் தமிழிசையை பார்த்தது முதல் நன்கு திட்டமிட்டு அவர் விமானத்தில் இருந்து வெளியேறும் சமயத்தில் சோஃபியா பா.ஜ.கவிற்கு எதிராக முழக்கமிட்டதில் இருந்தே அவர் விளம்பரத்தை தேடியுள்ளார் என்பது தெளிவாகிறது என்றும் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் விமானத்தில் ஏறி அமர்ந்த உடன் தமிழிசையை பார்த்த மாத்திரத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவையும் எழுதியுள்ளார் சோஃபியா.
   
அதாவது நான் பயணிக்கும் விமானத்தில் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை இருக்கிறார், தற்போது நான் பா.ஜ.கவிற்கு எதிராக முழக்கமிடப்போகிறேன், என்னை என்னவிமானத்தில் இருந்து இறக்கிவிட்டுவிடுவார்களா? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சோஃபியா எழுதியுள்ளார். ஆனால் அவர் விமானம் தரையிறங்கும் வரை தமிழிசைக்கு எதிராக எதையும் பேசவில்லை. இத்தனைக்கும் அவர் தமிழிசை அமர்ந்துள்ள இடத்திற்கு பின்னால் தான் அமர்ந்திருந்தார். 


   
மாறாக விமானம் நின்ற உடன் தமிழிசை கீழே இறங்க செல்லும் போது தனது கைகளை உயர்த்தி பாசிச பா.ஜ.க அரசு ஒழிக என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார் சோஃபியா. உண்மையிலேயே உணர்ச்சிப் பெருக்கில் உணர்ச்சிவசப்பட்டு சோஃபியா தமிழிசைக்கு எதிராக முழக்கமிடவில்லை, மாறாக அவர் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே இப்படி செய்துள்ளார் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவருவதாகவும் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
   
அதாவது தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்டால் பிரபலம் ஆகலாம் என்கிற எண்ணத்தில் தான் அவர் காத்திருந்து பா.ஜ.கவிற்கு எதிராக முழங்கியுள்ளார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் விமானத்தில் வைத்து ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக சோஃபியா முழக்கமிட்டதை எப்படி ஏற்க முடியும் என்றும் அவர்கள் வினவுகின்றனர். அதே விமானத்தில் பா.ஜ.க தொண்டர்கள் பத்து பேர் இருந்திருந்தால் நிலைமை விபரீதம் ஆகியிருக்காதா? என்றும் அவர்கள் கேட்கின்றனர்.
   
மேலும் தமிழிசையை பொறுத்தவரை சோஃபியா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. அவர் விமான நிலைய ஒழுங்காற்று ஆணையத்திடம் தான் புகார் அளித்துள்ளார். சோஃபியா செயலில் தவறு இருந்த காரணத்தினால் தான் விமான நிலைய அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைத்துள்ளனர். சோஃபியாவை மன்னித்து விட்டு விட்டால் நாளை வேறொரு தலைவரை வேறொரு சோஃபியா இதே போன்று அவமதிக்க நேரிடும் என்பதால் தான் புகார் அளித்ததாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.


   
தற்போது சோஃபியாவுக்கு ஆதரவாகவும், அவரது செயலை நியாயப்படுத்தியும், அவரை தொடர்ந்து இதே போல் செய்ய உற்சாகப்படுத்தியும் ஸ்டாலின், தினகரன் என பலரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் சோஃபியா மீது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் முழக்கமிடுதல் என மூன்று கடுமையான பிரிவிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
   
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது சோஃபியா தனது முகத்தை தனது துப்பட்டாவால் மறைத்து இருந்தார். இப்படி ஒரு நிலைமை தனக்கு ஏற்பட்டதை எண்ணி வருந்தியதால் தான் அவர் தனது முகத்தை மறைத்துக் கொண்டார் என்று யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மேலும் விமான நிலையத்தில் சோஃபியா அமர்ந்து ஒரு போலீஸ்காரரை பார்ப்பது போன்ற ஒரு புகைப்படமும் வெளியானது. அந்த புகைப்படத்தில் சோஃபியாவின் கண்களை பார்க்கும் போது செய்த தவறை அவர் உணர்ந்தது தெரிகிறது.
   
ஆனால் சமூக வலைதள போராளிகளோ சோஃபியாவின் கண்களில் பயம் தெரியவில்லை என்று அவரை மேலும் உசுப்பேற்றிவிட்டு வருகின்றனர். ஜாமீன் கிடைத்துவிட்டது.   தற்போது சோஃபியா தனது படிப்பை தொடர கனடா செல்ல வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம். இந்த வழக்கு முடியும் வரை அவரால் கனடா செல்ல முடியுமா? என்பதும் சந்தேகம் தான். தற்போது பிணை கிடைத்துவிட்டாலும் கூட விமானத்தில் வைத்து சோஃபியா முழக்கமிட்டதற்கான ஆதாரம் இருக்கிறது. எனவே அவரை விமானத்தில் ஏற்ற விமான நிறுவனங்கள் மறுக்கலாம்.

மேலும் இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நிரூபணம் ஆனால் 7 ஆண்டுகள் வரை கூட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.   இந்த வழக்கின் தீர்ப்பு வரும் போது தற்போது இருக்கும் தலைவர்கள் வேறு ஏதேனும் ஒரு விவகாரத்தில் பிஸியாக இருக்கலாம். அப்போது அதாவது சோஃபியாவுக்கு தண்டனை கிடைக்கும் போது இவர்கள் எல்லாம் இதே போல் அறிக்கை வெளியிடுவார்களா? என்பதும் சந்தேகம் தான். 
   
எனவே சமூக வலைதளங்களில் இயங்குபவர்கள் பொறுப்பை உணர்ந்தும் விபரீத்தை அறிந்தும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.