நான்கு தொகுதி இடைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டவில்லை என்பது அதிமுகவினருக்கும் ஒரு எரிச்சலை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது. அதிலும் வாரணாசி சென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் வேலை பார்க்கும் ஓபிஎஸ் தரப்பினர் தேனிக்கு அருகே இருக்கும் திருப்பரங்குன்றத்தை கண்டு கொள்ளவில்லை என்கிற மனக்குறையும் அவர்களுக்குள் உள்ளது. ஆனால் இதனைப் பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தலுக்கு பிந்தைய தனது நிலைப்பாடு குறித்து நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் தனது பிரச்சாரத்திற்கு கூட கூட்டத்தை கூட்டாமல் ஓபிஎஸ் மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள். இந்த அதிர்ப்பின் வெளிப்பாடாகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு சூடான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

வழக்கமாக அதிமுக சார்பில் வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளிலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பெயர் இடம்பெறும். கட்சி சார்பான அறிக்கைகளை ஓ பன்னீர்செல்வம் ஆக இருந்தாலும் சரி எடப்பாடி பழனிசாமி ஆக இருந்தாலும் சரி தனிப்பட்ட முறையில் வெளியிடுவது இல்லை. தமிழக அரசு தொடர்பான அறிக்கைகளை மட்டுமே எடப்பாடி பழனிசாமி தனியாக வெளியிட்டு வருகிறார். ஆனால் நேற்று அதிமுக கட்சி சார்பான அறிக்கையை எடப்பாடி பழனிசாமி தனித்து வெளியிட்டிருப்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

நேற்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2 ஆண்டுகளாக அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். இந்த அரசு தொடர அதிமுகவிற்கு 4 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு தரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்கும் அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் வெளியிட்டுள்ளது ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்த தான் என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தனியாக அறிக்கை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.