சேலத்தில் இருந்து சென்னைக்கு 277 கிலோமீட்டர் தூரத்தில் பசுமைவழிச்சாலை அமைக்கப்படும். 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த 8 வழிச்சாலை அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த திட்டத்திற்கான முறையான வரைவு தயாரிக்கப்பட்டதா? இல்லையா? என்பது தெரியாத நிலையில், உடனடியாக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் இறங்கினர். இந்த சாலை அமையக் கூடிய காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் வழியாக 8 வழி பசுமை சாலை அமையப்போவதாக அறிந்து விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளிடம் எதிர்ப்புக்கள் எழுந்தாலும், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில், காவல்துறை உதவியோடு நடைபெற்றது.

இந்த நிலையில், சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு செய்யாமல் செயல்படுத்தப்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த முறை விசாரணையின் போது, 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறி மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. திட்டம் தொடர்பான அறிக்கையில் முரண்பாடு இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், திட்டத்துக்கு நிலம் கையப்படுத்த காலக்கெடு ஏதும் நிர்ணயிக்காமல் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தை அடியோடு கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே உள்ள சாலைகளை விரிவுபடுத்தலாம். எட்டு வழி சாலையே தேவையில்லை. உற்பத்தி திட்டத்துக்கு செலவு செய்யலாம். இது அழிவு திட்டம்; உற்பத்திக்கான எதுவுமே இந்த திட்டத்தில் இல்லை என்கின்றனர் விவசாயிகள்

மேலும் பசுமை வழிச்சாலையால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. எனவே 8 வழிச்சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால தடை நிரந்தர தடையாக வேண்டும் என்பது விவசாய மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.