பாஜகவின் தமிழக துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2001ல் அதிமுகவின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். இவர் அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில், இரு அணிகளுக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்தார். அதோடு அவ்வப்போது பாஜக ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் பேசி வந்தார். இதனையடுத்து, நயினார் நாகேந்திரன், டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

பின்னர், தமிழிசை சவுந்தர்ராஜன் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்தபோது அவர் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வந்தது. இதில், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் எல். முருகன் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால், நயினார் நாகேந்திரன் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். 

இதனிடையே, நிர்வாகிகள் மாற்றத்திலாவது தனக்கு பொதுச்செயலாளர் போன்ற வலிமையான பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் மீண்டும் நயினார் துணைத் தலைவராகவே நியமிக்கப்பட்டிருக்கிறார். இது நயினார் நாகேந்திரனை மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சில மாதங்களுக்கு முன்பு பாஜக துணைத் தலைவராக இருந்து ஸ்டாலினை அடுத்த முதல்வர் என்று பகிரங்கமாக பாராட்டி, பின் திமுகவிலேயே சேர்ந்துவிட்ட அரசகுமார் இப்போதும் நயினாரிடம் ரகசியமாக பேசி  வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், பாஜகவின் தமிழக துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.  ஏற்கனவே வேதாரண்யம் முன்னாள் எம்,எல்.ஏ. வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் தமிழக பாஜகவிற்கு மற்றொரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.