தந்தை பெயரை சொல்லி உடன்பிறந்த அண்ணனையே விரட்டி அடித்தவர் ஸ்டாலின்.. தங்கம் தென்னரசை விளாசிய ஜெயக்குமார்.!
முதலமைச்சரின் தந்தை கருணாநிதி எப்படி முதலமைச்சரானார் என்ற வரலாறு அனைவருக்கும் தெரியும். துரோகத்தைப் பற்றி, துரோகக் கூடாரத்தின் வாரிசு பேசுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் அமெரிக்கா சென்றார் என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லாவிடில், ஸ்டாலினும், தங்கம் தென்னரசுவும் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நேற்று (23.05.2023) வெளியிட்ட அறிக்கையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களும், தொடர்ந்து அம்மாவின் அரசும் கடந்த 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாகவும், தொழில் துறையின் முன்னேற்றத்திற்காகவும் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள், தொடர்ந்து 2019-ல் அமெரிக்கா, துபாய் பயணங்கள் மற்றும் 2020-ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் முதலீட்டாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் ஆகிய நிகழ்வுகள் மூலம் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஈர்க்கப்பட்ட முதலீடுகள், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை தனது அறிக்கையில் தெளிவாக விளக்கியிருந்தார்.
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இன்றுவரை பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைத் துவக்கி வருகின்றன என்றும், விடியா திமுக அரசு எந்த ஒரு புதிய திட்டத்தையும் இந்த ஆட்சியில் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை என்றும் கூறியிருந்தார். தமிழகத்தின் GDP,தேசிய GDP-யைவிட 2020 வரை அதிகமாக இருந்ததையும், தற்போதைய விடியா திமுக ஆட்சியில் அது குறைந்துள்ளதையும் குறிப்பிட்டிருந்தார். மேலும், விடியா அரசின் அமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜன் அவர்களே, 'குறுகிய காலத்தில், முதலமைச்சரின் மகனும், மருமகனும் அடித்த 30,000 கோடியை எங்கு பதுக்குவது என்று தெரியாமல் தவிப்பதாக" ஒப்புதல் வாக்குமூலம் அளித்த உரையாடல் வெளியானது பற்றியும், இருவரும் மாறிமாறி வெளிநாடு சென்று வருவதையும் குறிப்பிட்டிருந்தார். இதற்கெல்லாம் நேரடியாக புள்ளி விவரங்கள் மூலம் பதில் அளிக்கத் திராணியற்ற முதலமைச்சர், நிதி அமைச்சர் பெயரில் ஒரு பிதற்றலை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் இறந்த பிறகு, கட்சி சீனியாரிட்டியில் டாக்டர் நாவலர் என்.வி. நடராஜன், மதியழகன் ஆகியோருக்குப் பின் இருந்த தற்போதைய முதலமைச்சரின் தந்தை கருணாநிதி எப்படி முதலமைச்சரானார் என்ற வரலாறு அனைவருக்கும் தெரியும். துரோகத்தைப் பற்றி, துரோகக் கூடாரத்தின் வாரிசு பேசுகிறது. ஏற்றிவிட்ட ஏணியான புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கே துரோகம் செய்த கூட்டம், துரோகத்தைப் பற்றி பேசுவது “சாத்தான் வேதம் ஒதுவதுபோல்" ஆகும்.
எங்கள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு முறையாக பதில் சொல்ல வக்கில்லாத விடியா அரசின் பொம்மை முதலமைச்சர், அடிமை அமைச்சர் தங்கத்தைவிட்டு நாலாந்தரமாக மிரட்டிப் பார்க்கிறார். கருணாநிதி உயிருடன் இருந்தவரை ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லாமல், திமுக-வின் தலைவராகக் கூட இன்றைய விடியா அரசின் முதலமைச்சரை நியமிக்காமல் தட்டிக் கழித்த வரலாறு தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். எந்தவிதமான உழைப்பும் இல்லாமல், தலைவரின் மகன் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில், ஜால்ரா கூட்டத்தின் உதவியுடன் போட்டியின்றி தேர்ந்ததெடுக்கப் பட்டவர்தான் தற்போதைய திமுக கட்சியின் தலைவர்.
தந்தை பெயரை சொல்லி உடன்பிறந்த அண்ணனையே விரட்டி அடித்தவர் அல்ல எங்கள் அண்ணன் எடப்பாடியார். தன் 45 ஆண்டுகால உழைப்பால், ஒரே இயக்கத்தில் உழைத்து, கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் தான் எங்கள் அண்ணன் எடப்பாடியார் அவர்கள். பெரும்பான்மையான கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 2017 முதல் 2021 வரை தமிழகத்தின் முதலமைச்சராக திறம்பட ஆட்சி நடத்தியவர். மாண்புமிகு அம்மா அவர்களின் திடீர் மறைவிற்குப் பிறகு, உங்களது 'B' Team ஆன ஓ. பன்னீர்செல்வம் போன்ற துரோகக் கூட்டத்திடமிருந்து கழகத்தைக் காப்பாற்றி, ஒற்றுமையாக செயல்பட்டு வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத விடியா அரசின் பொம்மை முதலமைச்சர், நிதி அமைச்சரை வைத்து பிதற்றல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடியார் அவர்கள் தலைமையிலான அம்மாவின் அரசு ஆட்சி செய்தபோது, தமிழக அரசுத் துறைகள் அகில இந்திய அளவில் முதலிடம் மற்றும் விருதுகள் பல பெற்று சாதனை படைத்ததில், ஒருசிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
* 2017 முதல் 4 ஆண்டுகளில் காவல் துறை (சட்டம்-ஒழுங்கில் முதலிடம், பெண்கள் பாதுகாப்பாக வாழ முதன்மை மாநிலம்).
* ஊரக வளர்ச்சித் துறையில் 123 விருதுகள் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை, மருத்துவத் துறை, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை, வனத் துறை, பொது நிர்வாகம், சமூக நலத் துறை, கைத்தறித் துறை, அறநிலையத் துறை, தொழில் துறை, கணினி துறை, மின்சாரத் துறை, பள்ளி மற்றும் உயர் கல்வித் துறை, போக்குவரத்துத் துறை என்று, அம்மாவின் அரசு அகில இந்திய அளவில் பரிசுகள் வாங்காத துறைகளே கிடையாது.
* இந்தியா டுடே' ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ் நாடு மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடம் வகித்தது.
* சிறந்த நிர்வாகத்தில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாம் இடம் (பொது விவகாரங்கள் மைய ஆய்வறிக்கை 2020 - பெங்களூரூ)
* உணவு தானிய உற்பத்தியில் தொடர்ந்து 5 முறை கிருஷி கர்மான் விருதினை பெற்று சாதனை.
* 2010-11ஆம் ஆண்டில் 32.9 சதவீதமாக இருந்த உயர் கல்வி மாணவர் சேர்க்கை தற்போது 51 சதவீதமாக உயர்வு, அகில இந்திய அளவில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை 2020-ஆம் ஆண்டிலேயே அம்மாவின் அரசு எட்டியது.
* எங்கள் ஆட்சியில் தமிழகம் மின்வெட்டு இல்லாத, மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்ததால், தொழில் துறைகள் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தை நோக்கி வந்தன. இதனால் முதலீடுகள் அதிகரித்தது; வேலை வாய்ப்புகள் பெருகியது; தொழில் வளம் பெருகியது.
* கழக ஆட்சிகளின்போது, உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 6-ஆவது முறையாக சிறந்த மாநிலம் என்ற விருதைப் பெற்றது. இந்த முதலிடத்தை கோட்டைவிட்ட பெருமை விடியா திமுக ஆட்சிக்கு உண்டு.
* கொரோனா நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நேரத்தில், நோய்த் தொற்றை தடை செய்வதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களே முதலமைச்சர்கள் கூட்டத்தில் பாராட்டினார். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி நடத்திய கள்ளச் சாராய விற்பனையால் ஏற்பட்ட உயிரிழப்பையும், மாநிலம் முழுவதும் நடைபெறும் கள்ளச் சாராய விற்பனையையும், திமுக நிர்வாகிகளால் நடத்தப்படும் சட்ட விரோத டாஸ்மாக் பார்கள் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நேரடியாக பதில் அளிக்கத் திராணியற்ற முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், உண்மையை கூறிய திரு. P.T.R. பழனிவேல் தியாகராஜன் அவர்களின் துறையை மாற்றினார். சரியானபடி அந்நிய முதலீட்டை ஈர்க்கத் தவறியதற்காகவும், தொழில் நிறுவனங்களிடமிருந்து கலெக்ஷன் செய்யத் தவறியதற்காகவும், துறையை மாற்றியிருந்த போதும், இதுபோன்ற பிதற்றல் அறிக்கை வெளியிட்டுள்ளார் தங்கம் தென்னரசு.
அம்மா அரசில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்துள்ளதாக பொத்தாம் பொதுவாகக் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் 2022-2023ஆம் ஆண்டு தாக்கல் செய்த மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகத்தில், பக்கம்-22ல், விடியா திமுக ஆட்சியின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் திரு. V. செந்தில்பாலாஜி 13 வருடங்களாக கள்ளச் சாரய இறப்பு எதுவும் மாநிலத்தில் நிகழவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில், துறை அமைச்சர் கூறியதற்கு விடியா திமுக அரசின் முதலமைச்சர் என்ன பதில் அளிக்கப் போகிறார் ?
மேலும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அவர்களுடைய மகனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். நான் ஒரு சவால் விடுகிறேன். அண்ணன் எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சர் பதவியை வகிப்பதற்கு முன்போ, பதவி வகிக்கும் போதோ, அல்லது இன்று வரையோ அவரது மகன் அமெரிக்காவே போகவில்லை என்று நான் சவால் விடுகிறேன். இதை முதலமைச்சர் ஸ்டாலினோ அல்லது பிதற்றல் அறிக்கை வெளியிட்டுள்ள தங்கம் தென்னரசுவோ அவரது அறிக்கையில் உள்ளபடி, அண்ணன் எடப்பாடியார் அவர்களுடைய மகன் அமெரிக்கா சென்றார் என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லாவிடில், ஸ்டாலினும், தங்கம் தென்னரசுவும் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
அம்மாவின் அரசில் பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த முதல் மெட்ரோ நகரமாக சென்னையும், நகரங்களில் கோயம்புத்தூரும் விளங்கின. 2023-24ஆம் ஆண்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை புள்ளி விவரங்களுடன் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் எடுத்துரைத்தார். சென்ற ஆண்டு தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் 58 ஆக உயர்ந்துள்ளது என்று உள்துறை மானியக் கோரிக்கையிலேயே முதலமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சென்ற ஏப்ரல் மாதம், கடலூர் மாவட்டம் விருதாசலத்தில் 5 வயது பச்சிளம் சிறுமியை பள்ளி தாளாளரும், விருத்தாசலம் நகர மன்ற திமுக கவுன்சிலர் ஒருவரும் பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வை, எங்கள் கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் நிகழ்த்திய கடும் போராட்டத்திற்குப் பிறகுதான், முதல் நாள் நடந்த சம்பவத்திற்கு அந்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
சென்னையில் திமுக-வின் சார்பில், முதலமைச்சரின் சொந்த சகோதரி மற்றும் திமுக பெண் எம்.பி-க்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில், திமுக நிர்வாகி, பெண் காவலரிடம் அத்துமீறிய நிகழ்வை நாங்கள் சுட்டிக்காட்டிய பிறகுதான், 4 நாட்களுக்குப் பிறகு நடவடிக்கை எடுத்தது இந்த விடியா அரசு. இதுதான் விடியா திமுக அரசின், பெண்களைக் காக்கும் லட்சணமாகும்.
மக்கள் மற்றும் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளையும், சந்தேகங்களையும் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நேரடியாக பதில் அளிக்கத் திராணி இல்லாமல், வாய்ப் பேச்சில் மட்டும் தீரராய் இருக்கும் திமுக, எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் கேள்விகளுக்கு நோடியான விளக்கக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.