கடையநல்லூர் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நைனா முகம்மது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தொகுதியில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு  நைனா முகம்மது வெற்றி பெற்றார். இதனையடுத்து, 2001-ம் ஆண்டு திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் அதிருப்தியில் இருந்த அவர், 2004-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

சுமார் 17 ஆண்டுகளாக அதிமுகவின் மாவட்ட சிறுபான்மை பிரிவு மற்றும் எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார். சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களித்ததைக் கண்டித்து அதிமுகவில் இருந்து விலகினார்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் வீட்டில் இருக்கும் போது திடீரென நெஞ்சுவலி  ஏற்பட்டது. பின்னர், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக  நெல்லையில் 1உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்ஸில் ஏற்றியதும் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் கடையநல்லூருக்கு கொண்டுசெல்லப்பட்டது. இவரது உடலுக்கு அதிமுக மற்றும் திமுக பிரமுகர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த  நைனா முகம்மதுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.