சிவகங்கை அருகே நடந்த சாலை விபத்தில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்பட இருவர் பலியான சம்பவம் திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை நகர் பகத்சிங் தெருவை சேர்ந்தவர் திமுக பிரமுகர் மனோகரன் (66). இவர் கடந்த 1989ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து இரு ஆண்டுகள் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். இவருக்கு சாந்தி, சுகுணா என்று இரு மனைவிகளும், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மனனைவி சாந்தி சிவகங்கை திமுக நகர் மன்ற தலைவராக பதவி வகித்தவர் ஆவார். 

இன்று காலையில் மனோகரன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் தொண்டி மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது படமாத்தூர் அருகே இருசக்கர வாகனமும் எதிரே வந்த வேனும், நேருக்கு நேர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்த முன்னாள் திமுக எம்எல்ஏ மனோகரன் மற்றும் அவரது நண்பர்
மொனாபீன் இருவரும் பலியானார்கள். 

சம்பவ இடத்திற்கு வந்த பூவந்தி காவல் நிலைய போலீசார் இருவரது உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.