அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தார்களா? என்பது தனக்குத் தெரியாது என்றும், ஜெயலலிதாவை, அமைச்சர்கள் பார்த்தார்கள் என்று நான் கூறியதாக வந்த செய்தி தவறானது என்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுந்ததை அடுத்து, முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதா உதவியாளர்களும், அரசு அதிகாரிகளும், சசிகலாவுக்கு தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை அமைச்சர்கள் பார்த்ததாக ராமமோகன்ராவ் கூறியதாக செய்திகள் வெளியானது. ராமமோகன் ராவ் கூறியதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நான் பார்க்கவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ராமமோகன்ராவ் திடீரென ஆஜரானார். அவருக்கு சம்மன் எதுவுமே அனுப்பப்படாத நிலையில், ராம மோகனராவ், தாம் ஏற்கனவே அளித்த பதில்களுக்கு கூடுதல் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. 

இதன் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, மாலை 6 மணிக்குத்தான் மருத்துவமனை வந்தேன்.

அமைச்சர்கள், ஜெயலலிதாவைப் பார்த்தார்களா? என்பது எனக்குத் தெரியாது. அமைச்சர்கள், ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்று நான் கூறவில்லை. நான் கூறியதாக வந்த செய்திகள் தவறானது என்றும் ராமமோகன் ராவ் கூறினார்.