புதுச்சேரி காங்கிரஸ் - திமுகவுக்கு கடும் போட்டியை உருவாக்க அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட அந்த மாநில முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி திட்டமிட்டுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து என்.ஆர். காங்கிரஸ் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் இன்றைய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை என்.ஆர். காங்கிரஸ் தோற்கடித்தது. வரும் தேர்தலிலும் பாஜக கூட்டணியில் புதுச்சேரியில் போட்டியிட அக்கட்சி திட்டமிட்டிருக்கிறது.

 

இதுபற்றி என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான என். ரங்கசாமி கூறுகையில், “ வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றது போல ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொள்வோம். வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார். நாங்கள் பாஜக கூட்டணியில்தான் உள்ளோம். அந்தக் கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். 

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று என்.ஆர். காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், புதுச்சேரியில் இந்தக் கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. வரும் தேர்தலில் புதுச்சேரியில் என்ன முடிவை அதிமுக மேற்கொள்ளும் என இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.