அரசியல் மற்றும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. ஆட்சியையும்... கட்சியையும்... தன் கண் அசைவில் கட்டுப்படுத்தி வந்தவர். ஆயிரம் எதிரிகள் நடுவே தனியொரு பெண்ணாய் போராடி சாதனைக்கு சொந்தமான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த தினம்.

 

இந்தியாவிலேயே 6 முறை தமிழக முதல்வராக நீண்டகாலம் பதவி வகித்த 2-வது பெண் முதல்வராக திகழ்ந்தவர் ஜெயலலிதா. 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், சினிமாவில் வெற்றி நாயகியாவும் வலம் வந்தவர். தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படிக்கட்டையும் வெற்றி படிக்கட்டாக மாற்றியவர் ஜெயலலிதா. 7 மொழிகளிலும் சரளமாக பேசத் தெரிந்த ஒரே முதல்வர். 

கர்நாடாகாவின் மைசூருவில் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தார். பெற்றோர் ஜெயராம் - வேதவள்ளி. இரண்டு வயதில் தந்தையை இழந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை நிறைவு செய்தார். குடும்ப சூழல் காரணமாக சினிமா துறையில் நுழைந்தார். 1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை வென்றது. திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்.,-ஜெயலலிதா ஜோடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலில் நுழைந்தார். எம்.ஜி.ஆர்., வழிகாட்டுதல் படி 1982-ல் அ.தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினரானார். பின்னர் 1983ல் கொள்கைபரப்புச் செயலரானார். 1983-ல் திருச்செந்துார் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 1984ல் ராஜ்யசபா எம்.பி., ஆனார். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பிறகு அதிமுக அணி இரண்டாக பிளவுப்பட்டது. அப்போது ஜெ., அணி மற்றும் ஜானகி அணியானது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது. 

1989-ல் சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலிலதா தலைமையிலான அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் போடிநாயக்கனுார் தொகுதியில் வென்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். 1989 பிப்ரவரியில், அ.தி.மு.க., மீண்டும் ஒன்றிணைந்தது. பின்னர் தனது ஆளுமை திறனால் அதிமுகவின் பொதுச்செயலராக தேந்தெடுக்கப்பட்டார். 

அ.தி.மு.க, கூட்டணி 1991 தேர்தலில் 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா முல்முறையாக முதல்வரானார். தேர்தல் மூலம் தேர்வான தமிழத்தின் முதல் பெண் முதல்வர், இளம் முதல்வர் என்ற பெருமையை தட்டிச் சென்றார். பின் 2001, 2011 தேர்தல்களில் வென்று முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 136 தொகுதிகளில் வெற்றி முதல்வரானார். பின்னர் 2016-ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார்.