former central minister m.k.azhagari speech

திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர் என்று, செயல்படாத தலைவர் சென்னையில் இருப்பதாகவும், செயல்படும் வீரர்கள் மதுரையில் உள்ளதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை எந்த தேர்தலிலும் திமுக ஜெயிக்காது என்றும், திமுக வெற்றிப்பாதையில் செல்ல வேண்டும் என்றால், திமுகாவில் மாற்றம் தேவை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

திமுகவில் மு.க.ஸ்டாலின் கை ஓங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் மற்றும் திமுகவை விட்டு சற்று ஒதுங்கி மு.க.அழகிரி இருந்து வருகிறார். ஆனால், அவ்வப்போது தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில், மு.க.அழகிரி மதுரையை அடுத்த பாலமேட்டில் இன்று அவரது ஆதரவாளர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காகவே உள்ளனர் என்றார்.

திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர். செயல்படாத தலைவர் சென்னையில் உள்ளார். செயல்படும் வீரர்கள் பாலமேட்டில் உள்ளனர் என்று மு.க.அழகிரி கூறினார்.