சேலத்தில் இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு காலால் எட்டி உதைத்த அதிமுக எம்.பி. வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுவத்துவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் கட்டயமாக்கப்பட்டு உள்ளது. மேலும், மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

இதனால், சேலம் மாவட்டத்தில் 27 இடங்களில் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்பி அர்ஜுனன், தனது தோட்டத்தில் இருந்து ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஓமலூர் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரின் காரை தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால், முன்னாள் எம்பி அர்ஜுனன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொபோது, அவர் தகாதா வாரத்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர், அர்ஜுனன் மீண்டும் காரில் அமர்ந்து, புறப்படுவதற்கு தயாரான நிலையில், மீண்டும் கீழே இறங்கி வந்து, காவல் அதிகாரியை தள்ளிவிட முயன்றார். பதிலுக்கு காவல் அதிகாரியும் அவரை தாக்கினார். பின்னர் அர்ஜுனன் உதவி காவல் ஆய்வாளரை காலால் எட்டு உதைத்தார். இதையடுத்து பணியில் ஈடுபட்டு இருந்த மற்ற அதிகாரிகள் தலையிட்டு சமாதானப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து முன்னாள் எம்.பி காரில் புறப்பட்டு சென்றார். ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னான் எம்.பி. போலீசாரை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.